அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தில் 3ம் ஆண்டு அறிவியல் கண்காட்சி

பெங்களூரு: பெங்களூரு அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தில், மூன்றாம் ஆண்டு அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தி அசத்தினர்.
பெங்களூரு ஜுன்னசந்திராவில் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் உள்ளது. இங்கு மூன்றாம் ஆண்டு அறிவியல் கண்காட்சி சமீபத்தில் நடந்தது. புதுமை இந்தியாவில் பாரதத்திற்கான அறிவியல் மற்றும் புதுமைகளில் உலகளாவிய தலைமைத்துவத்திற்கான இந்திய இளைஞர்களை மேம்படுத்துதல் என்ற கருப்பொருளுடன் நடந்த அறிவியல் மாநாட்டில் 13 கல்லுாரிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள், 1,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
கண்காட்சியில் மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தினர். 31 வன்பொருள், 34 மென்பொருள் தொடர்பான திட்டங்கள் இடம்பெற்றன. ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றின் முன்னேற்றங்கள் குறித்து, மாணவர்கள் விளக்கினர்.
பகவத் கீதையால் ஈர்க்கப்பட்ட கலை பிரதிநிதித்துவம் தொடர்பான ஓவியங்கள், வேலைப்பாடுகளை கொண்ட மினி கலை கண்காட்சியும் இருந்தது. சவாலான பாதையில் பயணம் செய்யும்போது பொறுமையை பராமரிக்கும் திறனை பஸ்ஸர் மேஸ் சோதித்தது.
ஹனிவெல் இந்தியாவின் விண்வெளி பொறியியல் இயக்குநர் டாங்கெட்டி சீனிவாசராவ் மாநாட்டில் பங்கேற்று, விமான போக்குவரத்து, மேம்பட்ட விமான இயக்கம் பற்றிய தனது எண்ணங்களை மாணவர்கள் இடையில் பகிர்ந்து கொண்டார்.
கண்காட்சியில் வன்பொருள் பிரிவில் எம்.வி.ஜே., பொறியியல் கல்லுாரியின் ஜே.ஏ.எஸ்.என்., குழு முதலிடம் பிடித்தது. அலையன்ஸ் பல்கலைக்கழகம் ஸ்மார்ட் போஸ்ச்சர் டிடெக்சன் கருவியை வடிவமைத்ததற்காக இரண்டாம் இடம் பிடித்தது.
அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் டீம் கன்யாரசி குழு டிடெக்சன் மற்றும் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் வடிவமைத்து மூன்றாம் இடம் பிடித்தது.
மென்பொருள் பிரிவில் பிரசிடென்சி பல்கலைக்கழகம் முதல் இடம்; காசநோய்க்கான மருந்தை கண்டுபிடித்த அமிர்தா விஸ்வ வித்யாபீடம் இரண்டாம் இடம் பிடித்தது.