ரவுடியின் தம்பி கொலையில் காதலி உட்பட 4 பேர் கைது

தங்கவயல் : சினிமாவை மிஞ்சும் வகையில், முன்னாள் காதலனை தனக்கு தெரிந்தவர்களை வைத்து, காதலியே திட்டமிட்டு கொடூரமாக கொலை செய்தது அம்பலமானது. காதலி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

மாரிகுப்பம் அடிஷனல் ரிவிட்டர்ஸ் லைனில் வசித்தவர், பிரபல ரவுடி ரீகனின் தம்பி சிவகுமார் என்ற தேன், 30. இவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, காதலித்து வந்தார்.

இதற்கிடையில் வேறொரு நபருடன் அந்த சிறுமி பழகி உள்ளார். இதனால், சிவகுமாரை கழற்றி விட திட்டமிட்டார். இம்மாதம் 22ம் தேதி கொலை செய்ய, தன் புதிய காதலனிடம் கூறியுள்ளார்.

அன்றைய தினம், சிவகுமாரை குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார். அவரோ, பல நண்பர்களுடன் வந்துள்ளார். இதனால் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

மறுநாள் காமசமுத்ராவுக்கு 'பிக்னிக்' போகலாம் என்று கூறி, சிவகுமாரின் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

சரமாரி வெட்டு



காமசமுத்ரா சாலையில் ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த மூன்று பேர், பட்டாக்கத்தியால் சிவகுமாரை சரமாரியாக வெட்டினர். உயிரை காப்பாற்றிக்கொள்ள அவர் தலைதெறிக்க ஓடினார்.

சரமாரியாக வெட்டியதில் அங்கேயே பலியானார். இதன் பின் எதுவும் நடக்காதது போல், இரு சக்கர வாகனத்தில் சிறுமி, தன் தாய் வீட்டுக்கு திரும்பினார்.

நடந்த சம்பவத்தை ஆட்டோவில் சென்ற டிரைவர், வீடியோ படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர்.

போலீசார் விசாரணையை துவக்கினர். வலைத்தள காட்சிகளை பார்த்தபோது, காதலி மீது போலீசார் சந்தேகம் அடைந்தனர். விசாரணையில், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் வலுத்தது.

கொலையாளிகள் பற்றி கேட்டபோது, ரவுடிகள் முகமூடி அணிந்திருந்ததாகவும், யாரென தெரியவில்லை எனவும் தெரிவித்தார். ஆனால், வீடியோ காட்சியில், யாரும் முகமூடி அணியவில்லை என்பது தெரிய வந்தது.

ஒப்புதல்



கொலை தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் சாம்பியன் ரீப், கே.என்.ஜே.எஸ்., பிளாக் பகுதியை சேர்ந்த மூன்று பேரிடம் போலீசார் விசாரித்தனர். கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

கைதான பெண்ணுக்கும், கொலையில் ஈடுபட்ட இருவருக்கும் வயது 17; ஒருவருக்கு வயது 19. அவர் பெயர் தீபக் என தெரிய வந்துள்ளது.

கொலையான 48 மணி நேரத்தில், நான்கு பேரும் கைது செய்யப்பட்டு உள்ளளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement