அலுமினிய துகள்கள் கலந்த 'ஏஏசி' கற்கள் கட்டடத்துக்கு உறுதி தரும்!

வீடு கட்டுவதற்கு செங்கல் பயன்படுத்துவது பாரம்பரிய பழக்கமாக மாறி இருந்தாலும், சில காரணங்களால் மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இந்த வகையில், செங்கல்லுக்கு மாற்றாக ஹாலோ பிளாக்குகள் பயன்படுத்துவது பரவலாக அதிகரித்தது.
இந்நிலையில், எரிசாம்பல் கற்கள், 'ஏஏசி' பிளாக்குகள் பயன்பாடும் பரவலாக அதிகரித்து வருகிறது. இதில் எரிசாம்பல் கற்கள், ஏஏசி பிளாக்குகளை பயன்படுத்துவதில் பொது மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று கட்டுமான துறையில் பரவலாக கூறப்படுகிறது.
உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியில் ஏஏசி பிளாக்குகளை பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்கான வழிமுறைகள் என்ன என்று பாருங்கள். சுவரில் எந்தெந்த இடங்களில் ஈரப்பதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பார்த்து, அங்கு ஏஏசி கற்களை பயன்படுத்தலாம்.
பொதுவாக எடை குறைவாக காணப்படும் ஏஏசி கற்கள், கட்டடத்தை நீண்ட காலத்துக்கு தாங்கிப் பிடிக்குமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது. எடை குறைந்து காணப்படுவது ஏஏசி கற்களின் அடிப்படை தன்மை என்பதால், கட்டுமானத்தின் ஒட்டுமொத்த சுமை அதிகரிப்பது தடுக்கப்படும்.
குறிப்பாக ஏஏசி கற்கள் எப்படி தயாரிக்கப்படுகிறது என்ற அடிப்படை விபரங்களை பொது மக்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். சிமென்ட், சுண்ணாம்பு, மணல், தண்ணீர், அலுமினிய துகள்கள் சேர்த்து தான் ஏஏசி கற்கள் தயாரிக்கப்படுகின்றன.
இவற்றில், மணலுக்கு பதிலாக பெரும்பாலான நிறுவனங்கள் எரிசாம்பலையும் பயன்படுத்துகின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அலுமினிய துகள்கள் குறிப்பிட்ட அளவில் சேர்க்கப்படுவதால், சிமென்ட், தண்ணீர் ஒன்று சேரும் இடத்தில் உறுதி தன்மை அதிகரிக்கிறது.
சாதாரணமாக சிமென்ட், தண்ணீர் சேரும் போது அந்த கட்டுமானத்தில் ஏற்படும் உறுதியைவிட, அலுமினிய துகள்கள் சேரும் நிலையில் அதிக உறுதி தன்மை உருவாகும். இதனால், கட்டுமானத்தில் இறுக்கம் ஏற்பட்டு, உறுதி தன்மையும் பல மடங்காக அதிகரிக்கும். உறுதி தன்மை அதிகரிக்கும் நிலையில், அதில் வெப்ப தடுப்பு அம்சமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இது மட்டுமல்லாது, ஏஏசி கற்களை கொண்டு கட்டப்படும் சுவர்களில் தீ எதிர்ப்பு தன்மை இயல்பாக காணப்படுவது கட்டடங்களுக்கு பாதுகாப்பான விஷயம். இதே போன்று ஒலியை தடுக்கும் என்பதால், வெளிப்புறம் காணப்படும் சத்தம் வீட்டுக்குள் வராது என்கின்றனர் கட்டுமானத் துறை பொறியாளர்கள்.