'காலைக்கதிர்' நடத்தும் 'கல்வி வழிகாட்டி' தொடங்கியதுபெற்றோர், மாணவ, மாணவியரால் அரங்கம் நிரம்பியது
'காலைக்கதிர்' நடத்தும் 'கல்வி வழிகாட்டி' தொடங்கியதுபெற்றோர், மாணவ, மாணவியரால் அரங்கம் நிரம்பியது
சேலம்:பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனை வழங்க, 'காலைக்கதிர்' நடத்திய கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று சேலத்தில் தொடங்கிய நிலையில், ஏராளமான மாணவ, மாணவியர், பெற்றோர்
வந்ததால் அரங்கம் நிரம்பியது.பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு, உயர்கல்வியில் சேர உள்ள மாணவ, மாணவியருக்கு ஆலோசனை வழங்க, 'காலைக்கதிர்' நாளிதழ் சார்பில், 'கல்வி வழிகாட்டி' நிகழ்ச்சி, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் நேற்று காலை தொடங்கியது.
இந்நிகழ்ச்சியை, 'காலைக்கதிர்' நாளிதழுடன், கோவை, ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனம் இணைந்து நடத்தியது.
கல்வி வழிகாட்டி கருத்தரங்கை, கோவை ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ஜெகஜீவன், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி தாளாளர் சித்ரா, கோவை கற்பகம் பல்கலை டீன் அமுதா, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி ஆகியோருடன், இந்நிகழ்ச்சிக்கு முதல் மாணவியாக வந்த, சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த காவ்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
'அறிவியல் துறையில் வாய்ப்புகள்' குறித்து டாக்டர் ஜெகஜீவன்; 'கலை பிரிவின் வாய்ப்புகள்' குறித்து டாக்டர் சித்ரா; '21ம் நுாற்றாண்டு திறன்கள்' குறித்து கல்வி ஆலோசகர் சத்தியநாராயணா; 'இன்ஜினியரிங் துறையில் எதிர்காலம்' குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி ஆகியோர், காலையில் நடந்த கருத்தரங்கில் பேசினர்.
மாலையில் நடந்த கருத்தரங்கில், 'கல்வி கடன் எளிது' குறித்து வங்கியாளர் விருதாசலம்; 'கடல்சார் படிப்புகள்' குறித்து, டாக்டர் குமாரசாமி; 'உடனடி வேலைவாய்ப்பு வழங்கும் படிப்புகள்' குறித்து கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா பேசினர்.
பிளஸ் 2 தேர்வு முடிந்து, அடுத்த நாளே, இந்நிகழ்ச்சி நடந்த நிலையில், ஏராளமான மாணவ, மாணவியர், பெற்றோர் திரண்டு வந்திருந்தனர். அரங்கமே நிறைந்த நிலையில், பலரும் நின்று கொண்டே குறிப்புகளை ஆர்வமுடன் எடுத்துக்கொண்டனர். தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு வந்த மாணவ, மாணவியரில், வினாக்களுக்கு சரியாக பதில் அளித்தவர்களுக்கு, லேப்டாப், டேப், ஸ்மார்ட் வாட்ச் என பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் கண்காட்சியில், 40க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள், அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை அனைத்து தகவல்களையும் வழங்கின. அதில் மாணவ, மாணவியரும், கல்லுாரி பிரதிநிதிகளிடம் பாடப்பிரிவுகள், கட்டண விபரம், கல்லுாரி வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை
கேட்டறிந்தனர்.
இந்நிகழ்ச்சியின், 'பவர்டு பை' பங்களிப்பாளராக, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், அமிர்தா விஸ்வ வித்யாபீடம் ஆகியவையும், 'கோ ஸ்பான்ஸர்' ஆக, கற்பகம் இன்ஸ்டிடியூட்,
இந்திய பட்டய கணக்காளர் சங்கம் இணைந்திருந்தன.
இன்று பேசும் பிரபலங்கள்
இன்றைய கருத்தரங்கில், 'சி.ஏ., மற்றும் வணிகவியல் படிப்புகள்' குறித்து ஆடிட்டர் அருண்; 'நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்' என, ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு; 'தேசிய அளவில் நுழைவுத்தேர்வுகள் மற்றும் உதவித்தொகைகள்' குறித்து, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன்; 'கோர் இன்ஜினியரிங்' குறித்து, டாக்டர் கருப்ப சுவாமி; 'மருத்துவம் சார்ந்த படிப்புகள்' குறித்து, கல்வி ஆலோசகர் அசோக்குமார்; 'வேளாண் துறை சார்ந்த படிப்புகள்' குறித்து டாக்டர் சுதாகர்; 'நீட், ஐ.ஐ.டி., தேர்வுகளில் சாதிக்க டிப்ஸ்' குறித்து, கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசுகின்றனர்.
கருத்தரங்கில் பரிசுபெற்றவர்கள் விபரம்
பரிசு பெற்ற மாணவ, மாணவியர் காலையில் நடந்த கருத்தரங்க அமர்வில், தர்மபுரி டி.கவின், நாமக்கல் வி.ஆர்.இந்திராக்ஷி, மேட்டூர் எஸ்.பி.விஸ்வநாத், கிருஷ்ணகிரி ஆர்.தனிஷ், சேலம் வி.ரித்திகா ஆகியோர், 'ஸ்மார்ட் வாட்ச்'களையும், ஆட்டையாம்பட்டி மாணவி ஆர்.சங்கரிதா, 'டேப்'பை பரிசாக பெற்றனர்.
மாலையில் நடந்த கருத்தரங்கில், சேலம் டி.கார்த்திகேயன், ஓமலுார் ஜி.காவ்யன், சேலம் வி.சுபஸ்ரீ, சேலம் வி.சவுமியா, சேலம் என்.கிரிஜா ஆகியோர், 'ஸ்மார்ட் வாட்ச்'களையும், சேலம் ஆர்.என்.சந்தோஷ்குமார், 'டேப்', மேட்டூர் ஆர்.எஸ்.நதிஷ், லேப்டாப்பை பரிசாக
வென்றனர்.'பிடித்ததை படிக்க வேண்டும்'
'அறிவியல் துறையில் வாய்ப்புகள்' குறித்து, டாக்டர் ஜெகஜீவன் பேசியது: எந்த படிப்பை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். ஆனால் அதற்கு முன் உள்ள சவால்களை யோசிக்க வேண்டும். பெற்றோர் ஆசை, உறவினர்கள் ஆலோசனை என அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு, உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்ய வேண்டும். அடுத்த, 5 ஆண்டுகளில், டேட்டா சயின்ஸ், ஏ.ஐ.எம்.எல்., சைபர் செக்யூரிட்டி, க்ளவுடு கம்யூட்டிங், மனிதவள மேம்பாடு, டிஜிட்டல் மார்க்கெட்டிங், பிளாக் செயின், எதிகல் ஹேக்கிங், எலக்ட்ரானிக்ஸ், அக்கவுன்ட்ஸ் அண்ட் பேங்கிங் உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படப்போகிறது. பாடத்திட்டத்தை தாண்டி, கம்யூனிகேசன் ஸ்கில், டிஜிட்டல் சாதனங்களை கையாளும் திறன், தலைமைப்பண்பு, உடன் பணிபுரியும் திறன், கிரியேட்டிவிட்டி, செல்ப் மேனேஜ்மென்ட், கோபமின்மை ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
'பல்வேறு திறன் அவசியம்'
'21ம் நுாற்றாண்டு திறன்கள்' குறித்து கல்வியாளர் சத்தியநாராயணா பேசியது: எந்த துறையில் படித்தாலும் வேலைவாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே வருகிறது. நேற்று உள்ள தொழில்நுட்பம் இன்று இருப்பதில்லை. அதனால் புது தொழில்நுட்ப படிப்புகளை தேர்வு செய்வதை விட அடிப்படை பாடங்களை தேர்வு செய்வது நல்லது. முதுகலையில் சிறப்பு பிரிவுகளை தேர்வு செய்யலாம். தொழில்நுட்ப கல்வியறிவு, கிரியேட்டிவிட்டி, பிரச்னை தீர்க்கும் திறன், நெகிழ்வு தன்மை, ஆழமான ஆர்வம், திறன் மேலாண்மை, திறனாய்வு சிந்தனை, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு, பயனுள்ள வாய்மொழி மற்றும் எழுத்து தொடர்பு, பன்முக புரிதல் உள்ளிட்ட பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம். பிராஜக்ட் அடிப்படையில் கற்றல் மிக அவசியம். முதலாம் ஆண்டில் இருந்து, பிராஜக்ட் செய்ய பழக வேண்டும். அதற்கேற்ப கல்லுாரிகளை தேர்வு செய்வதும் நல்லது.
'இனி எல்லாம் டிஜிட்டல் தான்'
'இன்ஜினியரிங் துறையில் எதிர்காலம்' குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியது: இன்ஜினியரிங்கில் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதே நேரம் சவால்களும் அதிகரித்து வருகின்றன. எந்த துறையை தேர்வு செய்து படித்தாலும், அதில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும். அதில் நாளுக்கு நாள் தொழில்நுட்ப மாற்றங்கள், வளர்ச்சி ஏற்பட்டு வருகின்றன. இன்றுள்ள ஏ.ஐ., இன்னும் 5 ஆண்டுக்கு பின் இருக்குமா என்பதே சந்தேகம்தான். ஏ.ஐ., தொழில்நுட்பத்தை எவ்வளவு, எங்கே, எப்படி பயன்படுத்துவது என தெரிந்து கொள்வது மிக அவசியம். டேட்டா சயின்ஸில் இன்று, 'சிந்தடிக் டேட்டா' வந்துவிட்டது. அது இங்கே சிலபஸில் இருக்காது. அதைத்தாண்டி தொழில்நுட்பத்தை கற்க வேண்டிய அவசியம் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு உள்ளது. பயோ மெடிக்கல் படித்தாலும், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை கற்க வேண்டும்.
'மனிதனை ஏ.ஐ., ஈடு செய்யாது'
'கலை பிரிவின் வாய்ப்புகள்' குறித்து, டாக்டர் சித்ரா பேசியது: ஏ.ஐ., தொழில்நுட்பம் வந்ததால், வேலை கிடைக்காது என்ற தோற்றம் பலருக்கு இருக்கிறது. அதேபோல் தான் கம்ப்யூட்டர் வந்தபோதும், மனிதர்களுக்கு வேலை இருக்காது என கூறினர். ஆனால் கம்ப்யூட்டர் துறையில்தான் அதிக வேலைவாய்ப்பு உருவானது. மனிதர்களின் உழைப்பை, ஏ.ஐ., ஈடு செய்துவிட முடியாது. மனிதர்களுடன் பேசி பழகும் வேலைவாய்ப்பு என்றால், வங்கி சார்ந்த படிப்புகள்; கதை, கவிதை, கன்டென்ட் ரைட்டிங் என்றால் மொழிப்பாடங்கள் என, பாடங்களை தேர்வு செய்யுங்கள். தன்னாட்சி கல்லுாரிகளில் இன்றைய வேலைவாய்ப்புக்கேற்ப பாடத்திட்டத்தையும் மாற்றிக்கொள்கின்றனர். குறிப்பாக பி.காம்., படிக்கும்போதே, சி.ஏ., பவுண்டேஷன் பாடங்களை படித்துக்கொள்ள முடியும். பியூர் சயின்ஸ் பாடங்களை தேர்வு செய்வோர் குறைந்து வருகின்றனர். எதிர்
காலத்தில் அவர்களுக்கு தேவை அதிகரிக்கும்.
'மாதம் ரூ.5 லட்சத்துக்கு மேல் சம்பளம்்'
'கடல்சார் படிப்புகள்' குறித்து, மதுரை ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸ் பேராசிரியர் குமாரசாமி பேசியது: பிளஸ் 2 முடித்தவுடன், கடல் சார் படிப்புகளில் டிப்ளமோ இன் நாட்டிக்கல் சயின்ஸ் ஓராண்டு படித்துவிட்டு, டெக் சைட்டில் பணியில் சேர்ந்து, கேப்டன் வரை உயர முடியும். மெரைன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, கப்பல் பராமரிப்பில் பணியில் சேரலாம். சேரும்போது, 30,000 முதல், 50,000 ரூபாய் வரை சம்பளம் பெற முடியும். 3 முதல், 5 ஆண்டுகளில், மாதம், 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெறலாம். கப்பல் பயண பணியில் எந்த வயதிலும் ஓய்வு பெற்று, கப்பல் பராமரிப்பு கம்பெனி, துறைமுகங்கள், கடல்சார் படிப்பு வழங்கும் கல்லுாரி என, பல துறைகளில் பணியை தொடர முடியும்.
'மெடிக்கல், இன்ஜினியரிங் தேவை குறையாது'
'உடனடி வேலைவாய்ப்பை வழங்கும் படிப்பு' குறித்து, கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா பேசியது: உயர்கல்வியை தேர்வு செய்யும்போது, உங்கள் ஆர்வத்தை மட்டும் பார்த்தால் போதாது. எது வரும் என, பார்க்க வேண்டும். கணக்கு வராத மாணவர்கள், இன்ஜினியரிங் எடுத்தால் சிரமப்படுவர். மெடிக்கல் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகள், எவர்கிரீன் படிப்புகள். இதன் தேவை எப்போதும் குறைவதில்லை. மருத்துவம் சார்ந்து, 30 வகை பி.எஸ்சி., படிப்புகள் உள்ளன. இன்ஜினியரிங், கால்நடை, மீன்வளம், வேளாண், ஆர்க்கிடெக்சர், சட்டம், பைன் ஆர்ட்ஸ், கேட்டரிங், பேஷன் டெக்னாலஜி, லிட்ரேச்சர், விளையாட்டு படிப்பு, மீடியா உள்ளிட்ட துறை படிப்புகளில் வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
'ரூ.7.50 லட்சம் கல்வி கடன் பெறலாம்'
'கல்வி கடன் எளிது' என, வங்கியாளர் விருதாசலம் பேசியதாவது: அங்கீகாரம் பெற்ற அனைத்து படிப்புகளுக்கும் கல்வி கடன் பெற முடியும். கல்வி, விடுதி உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் கடன் பெறலாம். 4 லட்சம் ரூபாய் வரை பெற்றோர் மார்ஜின் செலுத்த தேவையில்லை. 8 லட்சம் ரூபாய் வரை, 5 சதவீத மார்ஜின் தொகை செலுத்த வேண்டியிருக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கிய, அதாவது, 4.50 லட்சம் ரூபாய்க்கு குறைவாக, குடும்ப வருமானம் பெற்ற மாணவரின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும். படிப்பு முடித்து ஓராண்டுக்கு பின், 15 ஆண்டு வரை திரும்ப செலுத்தலாம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பி.எம்.வித்யாலட்சுமி திட்டத்தில், 7.50 லட்சம் வரை கல்வி கடன் பெற, பெற்றோர் கையொப்பம் இருந்தால் போதும்.