'ஹைடெக் ' நெல் கொள்முதல் நிலையம் தமிழகத்தில் முதல்முறையாக துவக்கம்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தில், 1.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அதிநவீன முறையில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டது.

இந்த கொள்முதல் நிலையத்திற்கு, விவசாயிகள் டிரக்டரில் கொண்டு வரும் நெல்லை, எலிவேட்டரால் நேரடியாக சேகரிப்பு முனையத்திற்கு மாற்றப்படும். அதன் கொள்ளளவு 16 டன். அந்த இயந்திரம், மாசுக்கட்டுப்பாடு பிரச்னைகளை தவிர்ப்பதற்காக, நெல்லில் உள்ள துாசியை சுத்தம் செய்ய ஒரு இயந்திரத்திற்கு நெல் மாற்றப்படுகிறது.

அதன்பின், நெல் தானியங்கி எடையில் சாக்கில் நெல்லை அளவீடு செய்து, தானியங்கி பேக்கிங் இயந்திரத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு மூட்டையாக தைக்கப்பட்டு, கன்வேயரில் நேரடியாக லாரிக்கு ஏற்றப்படும். இதனால், விவசாயிகளின் நெல் சிந்தாமல் மூட்டையாக தயாராகிறது.

ஒரு மணி நேரத்தில், 15 டன் அளவில், நாள் ஒன்றுக்கு 10 மணி நேரத்தில், 150 டன் நெல் கொள்முதல் செய்ய முடியும். விவசாயிகள் காத்திருக்கும் நேரமும், பணியும் எளிதாகும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலேயே முதல் முறையாக, இந்த நவீன கொள்முதல் நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் ஐந்து மடங்கு நெல் கொள்முதல் செய்யப்படும். இந்த கொள்முதல் நிலையத்தை, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தொழில்துறை அமைச்சர் ராஜா துவக்கி வைத்தனர்.

அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், ''தமிழகம் முழுதும் இதுவரை, 27 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு 36 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது,'' என்றார்.

Advertisement