சொத்து தகராறில் பயங்கரம் தொழிலாளி அடித்து கொலை

சாத்தான்குளம்:துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே அலங்கிணறு காலனி தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ், 52, கட்டட தொழிலாளி. பூர்வீக சொத்து தொடர்பாக இவரது குடும்பத்திற்கும், தம்பி காசிவேல் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில், நேற்று அந்தோணிராஜ் வீட்டின் அருகே காசிவேல், அவரது மகன் பரத், 19, மற்றும் சிலர் அவரிடம் தகராறு செய்து கம்பால் தாக்கினர். அங்கிருந்தவர்கள் அந்தோணிராஜை மீட்டு, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாகக் கூறினர்.

இதற்கிடையே, அந்தோணிராஜ் தாக்கியதாக காசிவேல், அவர் தாய் அருளம்மாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரும் உடல்நலம் சரியில்லை எனக் கூறி, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள பரத்தை தேடுகின்றனர்.

Advertisement