எஸ்.ஐ., கொலை வழக்கில் போலி ஆவண சர்ச்சை; பெண் இன்ஸ்பெக்டரிடம் டி.ஐ.ஜி., விசாரிக்க உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி எஸ்.ஐ.,ஆல்வின் சுதன் கொலை வழக்கில் தொடர்புடையவர் போலீசார் தாக்கியதில் இறந்ததாகவும், அதில் மேல் விசாரணை தேவையில்லை என போலி ஆவணம் மூலம் இறுதி அறிக்கை தாக்கல் செய்த விவகாரத்தில் சிவகங்கை சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரியதில் மனுவை ராமநாதபுரம் டி.ஐ.ஜி., விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம் ஆவரங்காடு பாண்டிமுத்து தாக்கல் செய்த மனு: வேம்பத்துார் அருகே 2012 ல் மருதுபாண்டியர் நினைவுநாள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருப்பாச்சேத்தி எஸ்.ஐ., ஆல்வின் சுதன் கொலை செய்யப்பட்டார். எனது மகன் குமார் உள்ளிட்ட சிலர் மீது திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிந்தனர். 2013ல் குமாரை திருப்பாச்சேத்தி போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணை சிவகங்கை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் என்னிடம் வெற்று காகிதத்தில் கையொப்பம் பெற்றனர். சில போலீசார் அடித்து மகனை கொலை செய்ததாக அவர்களிடம் நானும் சிலரும் வாக்குமூலம் அளித்தோம். போலீசாருக்கு ஆதரவாக நாங்கள் வாக்குமூலம் அளித்ததாக உண்மைகளை மறைத்து பதிவு செய்துள்ளனர்.

வழக்கு விசாரணையை மேலும் தொடர வேண்டாம் என நான் தெரிவித்ததாகக்கூறி போலி ஆவணங்கள் தயாரித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் சிவகங்கை கீழமை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மகனின் மரணத்திற்கு காரணமான சில போலீசாரை காப்பாற்றும் நோக்கில் உண்மைக்கு புறம்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும். சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் கீதா மீது நடவடிக்கை கோரி டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி பி.தனபால்: மனுவை ராமநாதபுரம் டி.ஐ.ஜி., விசாரித்து சட்டத்திற்குட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement