காவல், தீயணைப்பு துறை கட்டடங்கள் திறப்பு

சென்னை: காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில், 41.32 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில், 50; தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், 46 என மொத்தம், 96 காவலர் குடியிருப்புகள், 18.06 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் போலீஸ் நிலையம்; திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், மகளிர் போலீஸ் நிலையம், 1.74 கோடி ரூபாயில் கட்டப்பட்டுஉள்ளன.

தீயணைப்பு துறை



சென்னை துரைப்பாக்கத்தில் 6; மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் 2; ராணிப்பேட்டையில் 19; திருச்சி மாவட்டம் துறையூரில், 18 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

சென்னை அம்பத்துார்; மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார்; தேனி மாவட்டம் கடமலைக்குண்டு; திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஆகியவற்றில், தீயணைப்பு நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.

அத்துடன் காவல் துறை பயன்பாட்டிற்காக, 5 கோடி ரூபாயில், 500 இரு சக்கர வாகனங்கள்; 27.09 கோடி ரூபாயில் வாங்கப்பட்டுள்ள, 300 பொலிரோ வாகனங்கள்; தீயணைப்பு துறைக்கு, 28.45 கோடி ரூபாயில், 50 நீர்தாங்கி வண்டிகள், 10 ஜீப்புகள், 50 இரு சக்கர வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், தலைமை செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், டி.ஜி.பி., சங்கர் ஜிவால், தீயணைப்புத் துறை இயக்குனர் அபாஷ்குமார் பங்கேற்றனர்.

Advertisement