ரயிலில் கடத்திய 16 கிலோ கஞ்சா பறிமுதல்

மயிலாடுதுறை:தெலுங்கானா மாநிலம் கச்சிக்குடாவில் இருந்து மதுரை சென்ற வாராந்திர விரைவு ரயிலில் நேற்று முன்தினம் மாலை மயிலாடுதுறை ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.

கொள்ளிடம் - சீர்காழி இடையே ரயில் வந்து கொண்டிருந்தபோது எஸ். 1 பெட்டியில் பயணியர் இருக்கையின் கீழ் சந்தேகத்திற்கு இடமான வகையில் டிராவல் பேக் இருந்ததை போலீசார் கண்டெடுத்தனர். பையை சோதனை செய்தபோது அதில், 16 கிலோ கஞ்சா இருந்தது.

இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அந்த இருக்கையில் பயணித்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா முசுவனுத்துார் பகுதியைச் சேர்ந்த முத்துசெல்வம், 33, என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் நாளிதழ் ஒன்றின் நிலக்கோட்டை தாலுகா செய்தியாளராக பணியாற்றுவதாகவும், தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்க நிலக்கோட்டை செயலராக உள்ளதாகவும் அடையாள அட்டைகளை காண்பித்துள்ளார்.

ஆனால் அவர் பையை கொண்டு வந்து வைத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து முத்துசெல்வத்தை, கஞ்சாவுடன் நாகப்பட்டினம் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு, 4 லட்சம் ரூபாய் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement