'ஹனி டிராப்' விவகாரத்தில் மனு: சுப்ரீம் கோர்ட் நீதிபதி கோபம்

3

''உங்கள் அரசியல் முட்டாள்தனத்தை கேட்க நாங்கள் இங்கு வரவில்லை,'' என, 'ஹனி டிராப்' தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதி காட்டமாகக் கூறினார்.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. கடந்த 20ம் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா, தன்னை, 'ஹனி டிராப்' செய்ய முயற்சி நடந்ததாக பரபரப்பு புகார் கூறினார்.

மேலும், மாநில, தேசிய அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், நீதிபதிகள் என, 48 பேரின் அந்தரங்க வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் சிலரிடம் இருப்பதாகவும் கூறி இருந்தார்.

இதற்கிடையில், ஜார்க்கண்டைச் சேர்ந்த பினய்குமார் சிங் என்பவர், கர்நாடகாவில் நடந்த ஹனி டிராப் விவகாரம் குறித்து சி.பி.ஐ., அல்லது நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 24ம் தேதி மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி விக்ரம்நாத் விசாரித்தார். மனுதாரர் தரப்பு வக்கீல் தங்கள் வாதங்களை முன்வைத்தார்.

பின், நீதிபதி விக்ரம்நாத் கூறுகையில், ''மனுதாரர், ஜார்க்கண்டைச் சேர்ந்தவர். அவருக்கும், கர்நாடகாவுக்கும் என்ன தொடர்பு? உங்களது அரசியல் முட்டாள்தனத்தை கேட்க நாங்கள் இங்கு வரவில்லை. நீதிபதிகள் ஏன் ஹனி டிராப்பில் சிக்குகின்றனர்?

''அப்படி இருந்தாலும் அவர்களே பார்த்துக் கொள்வர். இந்த மாதிரியான மனு மீதான வாதங்களை கேட்டுக் கொண்டு, அமைதியாக அமர்ந்து இருக்க முடியாது. எங்களுக்கு நிறைய வேலைகள் உள்ளன,'' என காட்டமாகக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.

- நமது நிருபர் -

Advertisement