குளத்தை துார்வார ரூ.1 லட்சம் கேட்ட தி.மு.க., ஒன்றிய செயலர்: வைரலான வீடியோவால் சர்ச்சை
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் குளத்தை தூர்வார ரூ.ஒரு லட்சம் கேட்ட தி.மு.க. ஒன்றிய செயலாளரை பொதுமக்கள் வழி மறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பிசிலி குளம் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் குளத்தில் மண்நிறைந்து மழைக்காலங்களில் சேமிக்கப்படும் நீரின் அளவு குறைந்தது. மேலும் அப்பகுதி கிராமங்களில் கிணறுகளில் தண்ணீர் வற்றியது.
தற்போது குளங்கள் வற்றி வரும் நிலையில் பல்வேறு குளங்களில் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
இதுபோல பிசிலி குளத்திலும் பொதுமக்கள் அதிகாரிகளின் அனுமதி பெற்று பொதுமக்கள் தூர்வாரிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த தி.மு.க., கிள்ளியூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபால், குளத்தில் இருந்து தூர்வாரி மண் எடுக்க வேண்டும் எனில் தனக்கு ரூ.ஒரு லட்சம் தர வேண்டும் என கேட்டதாக ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிக அளவில் தண்ணீர் தேக்க அதிகாரிகளின் அனுமதியுடன் தான் மண் எடுப்பதாகவும் அவர்கள் அவரிடம் கூறினர். இதையடுத்து காரில் ஏறி புறப்பட தயாரான ஒன்றிய செயலாளரை அங்கிருந்தவர்கள் வழிமறித்தனர். காரிலிருந்து வெளியே வந்த ஒன்றிய செயலாளர், காரை வழி மறித்தவர்களை படம் எடுத்தார்.
இதுபோல பொதுமக்களும் அவரை படம் எடுத்தனர். பின் ஒன்றிய செயலாளர் அங்குள்ள ஒரு ரோட்டோர கல்வெட்டில் அமர்ந்து விட்டு பின் அங்கிருந்து சென்றார். அதன் பின்னர் பொதுமக்கள் வழக்கம்போல் மண் எடுக்க துவங்கினர். இக்காட்சிகள் இடம் பெற்ற வீடியோ வைரலானதால் சர்ச்சை எழுந்துள்ளது.
மேலும்
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை
-
மஹாபாரதத்தில் வெற்றி யாருக்கு? எம்.எல்.ஏ., எத்னால் கேள்வி