தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை! அமைச்சர் செலுவராயசாமி விளக்கம்

மாண்டியா: “கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை,” என, விவசாய அமைச்சர் செலுவராயசாமி விளக்கம் அளித்துள்ளார்.

மாண்டியா ஸ்ரீரங்கப்பட்டணா கே.ஆர்.எஸ்., அணையின் ஒரு மதகை இம்மாதம் 24ம் தேதி திறந்து, 2,000 கனஅடி தண்ணீர் வெளியேறியது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விவசாய அமைச்சர் செலுவராயசாமி நேற்று அளித்த பேட்டி:

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்காக, கே.ஆர்.எஸ்., அணையின் ஒரு மததை திறக்கப்படவில்லை. தவறுதலாக மதகு திறந்துவிட்டது. அதிகாரிகள் சரியான நேரத்தில் மதகை மூடினர். அணையில் இருந்து 600 முதல் 700 கனஅடி தண்ணீர் வெளியேறி இருக்கலாம். 100 ஆண்டுகள் பழமையான கே.ஆர்.எஸ்., அணை மதகுகளை ஆய்வு செய்ய வர வேண்டுமென, துணை முதல்வர் சிவகுமாருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். மாண்டியாவில் கூட்டுறவு தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். மாண்டியாவில் பா.ஜ.,வுக்கு இரண்டரை லட்சம் ஓட்டுகள் உள்ளன.

லோக்சபா தேர்தலின்போது பிரதமர் மோடியை மனதில் நினைத்து ஓட்டுப் போடுகின்றனர். சட்டசபை தேர்தலின்போது, வேட்பாளரை பார்த்து ஓட்டுப் போடுகின்றனர்.

அமைச்சர் ராஜண்ணாவை 'ஹனிடிராப்' செய்ய முயன்றது பற்றி உயர்மட்ட விசாரணை நடத்தப்படும்.

விவசாய பல்கலைக்கழகத்தை ஹாசனுக்கு கொண்டு செல்ல, ம.ஜ.த., ரேவண்ணா முயற்சி செய்தார். ஆனால் அது நடக்கவில்லை. மாண்டியா மாவட்டத்தில் நல்லது நடப்பதை, குமாரசாமி, ரேவண்ணாவால் பொறுத்துக் கொள்ள முடியாது.

இவ்வாறு கூறினார்.

Advertisement