கிரேட்டர் பெங்., நிர்வாக மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னர்

பெங்களூரு: ஒப்புதலுக்காக தன்னிடம் அனுப்பப்பட்ட கிரேட்டர் பெங்களூரு நிர்வாக மசோதாவை, கவர்னர் தாவர்சந்த் கெலாட், அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.

சட்டசபை, மேல்சபையில் கிரேட்டர் பெங்களூரு நிர்வாக மசோதாவை தாக்கல் செய்தபோது, எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர்.

'மசோதாவில் உள்ள அம்சங்கள் அமலுக்கு வந்தால், பெங்களூரு உடைந்து போகும். வேறு மொழியினருக்கு, அதிக முக்கியத்துவம் கிடைக்கும். மசோதாவை அரசு திரும்பப் பெற வேண்டும்' என, அவர்கள் பிடிவாதம் பிடித்தனர்.

அவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதாவை அரசு நிறைவேற்றியது. கவர்னரின் ஒப்புதலுக்காக ராஜ்பவனுக்கு அனுப்பியது.

ஆனால் அவர் வழக்கம் போல, சில விளக்கங்களை கேட்டு மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பிஉள்ளார்.

இதுதொடர்பாக, சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:

கிரேட்டர் பெங்களூரு நிர்வாக மசோதாவுக்கு, சட்டசபையின் இரண்டு சபைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அவர் சில விளக்கங்கள் கேட்டு, மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.

கவர்னர் கேட்டபடி, தெளிவான விளக்கங்களுடன் மசோதாவை மீண்டும் அனுப்புவோம். ஒப்புதல் அளித்து கையெழுத்து போடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த 2023 ஆகஸ்ட் முதல், இதுவரை 119 மசோதாக்கள் அங்கீகாரம் அளிக்கப்பட்டன. இவற்றில் 83 மசோதாக்கள் சட்டமாக அமல்படுத்தப்பட்டன.

நான்கு மசோதாக்கள் கவர்னரிடம் உள்ளன. ஏழு மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டுள்ளார். ஐந்து மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement