மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு

சென்னை: மதுரை மரிக்கொழுந்து மற்றும் விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு மத்திய அரசின் தொழில்துறை மற்றும் உற்பத்தி மேம்பாட்டு துறை புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.


ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. புவிசார் பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்தோடும், போலியாக வேறு பெயர்களில் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும்.

அந்த வகையில் தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு உட்பட பல்வேறு பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.


இந்நிலையில், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில், மரிக்கொழுந்து அதிகம் விளைகிறது. ஒரு காலத்தில் மதுரையில் அதிகம் விளைந்தது. அழிவின் விளிம்பில் இருப்பதால், புவிசார் குறியீடு பெற, கடந்த 2021ம் ஆண்டு முயற்சி எடுக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை மரிக்கொழுந்து , விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு இந்திய தொழில்துறை சார்பில் புவிசார் குறியீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

மரிக்கொழுந்து



மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வளரக்கூடிய மரிக்கொழுந்து, மதுரையின் இறைவழிபாட்டில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. 16ம் நூற்றாண்டில் நடந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண விழாவில் மரிக்கொழுந்து பயன்படுத்தப்பட்டதற்கான பதிவுகள் உள்ளன. மதுரையின் தனித்துவமான பண்பாட்டு அடையாளமாக விளங்குவதால், மரிக்கொழுந்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.


அதேபோல், மதுரை அருகே விளாச்சேரியில் தொழிலாளர்கள் தயாரிக்கும் களிமண் பொம்மைகள், அப்பகுதியில் கிடைக்கும் இயற்கை மண்ணின் தனித்துவத்தால் பிரபலமானவை. விளாச்சேரி கீழக்குயில்குடி கருப்பசாமி கோவிலின் மூலவர் சிலை நூறு ஆண்டுகளுக்கும் முன்பு களிமண்ணால் உருவாக்கப்பட்டது என்பது இதன் வரலாற்றுச் சிறப்பை விளக்குகிறது. இந்தப் பொம்மைகள், தெய்வ வழிபாட்டு சிற்பங்கள் என்ற வகையில் ஏற்றுமதியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Advertisement