விரலை கடித்தவர் பற்கள் உடைப்பு: அ.தி.மு.க., -- தி.மு.க.,வினர் மோதல்

14

பெ.நா.பாளையம்: கோவையில் அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதித்தது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அ.தி.மு.க., கிளை சார்பில் கஸ்துாரிபாளையத்தில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க.,வை விமர்சனம் செய்து பேசினர். இதை அறிந்த பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் விஷ்வ பிரகாஷ், அப்பகுதியில் உள்ள அ.தி.மு.க., பிரமுகர் குணாவிடம் தட்டிக் கேட்டார்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், குணாவின் கைவிரலை விஷ்வபிரகாஷ் கடித்தார். குணாவின் உறவினர் ஒருவர், விஷ்வபிரகாசை தாக்கியதில், இரண்டு பற்கள் உடைந்தன. குணாவும், விஷ்வபிரகாசும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது மருத்துவமனைக்கு வந்த அ.தி.மு.க.,வை சேர்ந்த பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ரகுநாதனை, தி.மு.க.,வினர் அடித்து உதைத்தனர். முகத்தில் காயம் அடைந்த அவரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து குணாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க.,வினரும், விஷ்வபிரகாசுக்கு ஆதரவாக தி.மு.க.,வினரும் மருத்துவமனை முன் திரண்டனர்.

தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ரோடு ஈஸ்வரன் கோவில் முன் தி.மு.க.,வினரும், ஜோதிபுரத்தில் அ.தி.மு.க.,வினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.எஸ்.பி., (பொறுப்பு) அதியமான் உறுதி அளித்ததையடுத்து, இரு தரப்பினரும் மறியலை கைவிட்டனர்.

இந்த சம்பவத்தால், கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement