'ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் அரசு தடுக்குமா; வேடிக்கை பார்க்குமா?'

2

சென்னை: 'ஆன்லைன்' சூதாட்டத்தினால், 87 பேர் இறந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுவதில், தமிழக அரசின் நிலை என்ன என, பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை:

திருப்பத்துார் மாவட்டம், நாட்றாம்பள்ளி தாலுகா, மிட்னாக்குப்பம் கிராமத்தை சேர்ந்த மதன்குமார். இவர் 'ஆன்லைன்' சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், அவரது குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது.

இதை தாங்கிக் கொள்ள முடியாமல், அவரது மனைவி வெண்ணிலா, தற்கொலை செய்து கொண்டார்.

'ஆன்லைன்' சூதாட்டம் காரணமாக நிகழும் தற்கொலைகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. வெண்ணிலாவின் தற்கொலை, கடந்த 3 மாதங்களில் நிகழ்ந்த 10-வது தற்கொலை.

'தி.மு.க., அரசு இயற்றிய 'ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு பின், கடந்த ஒன்றரை ஆண்டுகளில், 27 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 87 பேர் இறந்துள்ளனர். 'ஆன்லைன்' சூதாட்டத்திற்கு, உச்ச நீதிமன்றத்தில் உடனே தடை பெறுவது சாத்தியமில்லை என்றால், தடை செய்வதற்காக புதிய சட்டத்தை, சட்டசபையில், உடனே நிறைவேற்ற வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழ்ந்த தற்கொலைகளில், 77 உயிரிழப்புகள் தி.மு.க., ஆட்சியில் நிகழ்ந்துள்ளன. எனவே, ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க வேண்டிய பொறுப்பு, தி.மு.க., அரசுக்கு உள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன; உச்ச நீதிமன்றத்தை அணுகியோ, புதிய சட்டத்தை இயற்றியோ, ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்கப் போகிறதா அல்லது தற்கொலைகள் தொடரட்டும் என, வேடிக்கை பார்க்கப் போகிறதா. இதை தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement