போலீஸ் செய்திகள்.....

ரயிலில் கஞ்சா

திண்டுக்கல்: புருலியாவிலிருந்து திருநெல்வேலி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று திண்டுக்கல் ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அதில் முன்பதிவில்லா பெட்டியில் ஒரு பேக் இருந்தது. போலீசார் அதை சோதனை செய்தபோது 700 கிராம் கஞ்சா, ரூ.7 ஆயிரம் பணம் இருந்தது. போலீசார் அதை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

பள்ளத்தில் பாய்ந்த வேன்

வடமதுரை: கரூர் மாவட்டம் கடவூர் சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்து மில் தொழிலாளர்களுடன் வடமதுரை சென்ற வேன், நேற்று காலை அய்யலுார் மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோட்டோர பள்ளத்தில் பாய்ந்தது. ராஜகவுண்டன்பட்டி டிரைவர் கருப்பசாமி 23, சிங்கம்பட்டி பிரியா 40 உள்பட 5 பேர் காயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

கொள்ளை முயற்சி: வாலிபர் கைது

வேடசந்துார்: வடமதுரை ரோடு பழைய சாந்தி தியேட்டர் காம்ப்ளக்சில் தனியார் வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர் நேற்று முன்தினம் அதிகாலை 4 :10 மணிக்கு உடைக்க முயன்றார். அலாரம் அடித்ததால் மர்ம நபர் தப்பினார். வேடசந்துார் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார், சி.சி.டிவி., காட்சிகளை ஆய்வு செய்து இதில் ஈடுபட்ட வடமதுரை செங்குறிச்சி ஆலாம்பட்டியைச் சேர்ந்த கொடிக்கூத்தன் 25, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

காட்டுத் தீ

வேடசந்துார்: பேரூராட்சி 15 வது வார்டு எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் வீராணம் குளம் உள்ளது. இங்கு கூடுதலான முட்செடிகள் வளர்ந்து, காய்ந்துள்ளது. காய்ந்த முட்களில் திடிரென தீப்பற்றியதில் வேகமாக எரியத் துவங்கியது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள், குடங்களில் தண்ணீரைக் கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். முடியாத நிலையில், வேடசந்துார் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

கஞ்சா விற்றவர்கள் கைது

பட்டிவீரன்பட்டி: நெல்லுார் பகுதியில் கஞ்சா விற்பதாக பட்டிவீரன்பட்டி போலீசார் ரோந்து சென்ற போது, கண்மாய் அருகில் நின்ற இருவரை சோதனை செய்ததில், 2 கிலோ கஞ்சா வைத்திருந்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். விசாரணையில் நெல்லுாரை சேர்ந்த பவுன்ராஜ் 55, கலைச்செல்வன் 31 என்பதும் இவர்கள் இருவரும் மாமனார், மருமகன் என்பதும் தெரிந்தது.

Advertisement