சதீஷ் - குமாரசாமி சந்திப்பு ஜி.டி.தேவகவுடா சந்தேகம்

மைசூரு: பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி - மத்திய அமைச்சர் குமாரசாமியுடனான சந்திப்பின் ரகசியத்தை, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா 'போட்டு' உடைத்தார்.
சாமுண்டீஸ்வரி தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா நேற்று மைசூரில் அளித்த பேட்டி:
பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளிக்கு முதல்வராகும் ஆசை உள்ளது. இதன் காரணமாகவே, முன்னாள் பிரதமர் தேவகவுடாவையும், மத்திய அமைச்சர் குமாரசாமியையும் சந்தித்து பேசி இருக்கலாம். ம.ஜ.த.,விடம் உள்ள 18 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு குறித்து பேசி இருக்கலாம்.
சித்தராமையா 2004ல் முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 2013ல் தான் முதல்வராக ஆனார். அவருக்கு முன்பே, தரம்சிங் முதல்வர் ஆகிவிட்டார்.
சிவகுமார், சதீஷ் ஜார்கிஹோளி என யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும். எத்னால் குறித்து பேச விரும்பவில்லை. அவரது விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். சட்டசபையில் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பேசி இருந்தால் மக்கள் சந்தோஷப்படுவர். ஹனி டிராப் விஷயம் குறித்து பேசி இருப்பது வருத்தம் அளிக்கிறது. ஹனி டிராப் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.