'ஸ்பைஸ்ஜெட்' விமானத்தின் டயர் வெடித்ததால் 74 பயணியர் தவிப்பு

சென்னை:'ஸ்பைஸ்ஜெட்' விமானத்தின் டயர் வெடித்து, விமான சேவை பாதிக்கப்பட்டதால், சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு செல்லவிருந்த 74 பயணியர் தவிப்புக்கு உள்ளாகினர்.

சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு செல்லவும், அங்கிருந்து சென்னைக்கு வரவும் எட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தென் மாவட்ட பயணியரின் தேவை அதிகரிப்பு காரணமாக, விமான சேவையின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக, காலை நேரத்தில் விமான சேவை தேவை இருப்பதாக பயணியர் தெரிவித்தனர்.

புறப்பட தயார்



இதையடுத்து, சென்னை - துாத்துக்குடி இரு மார்க்கத்திலும் தலா ஆறு சேவைக்குஏற்பாடு செய்யப்பட்டது. 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனம், காலை, மாலை என, தன் விமான சேவையை உயர்த்தி உள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு, முதன் முதலாக காலை விமான சேவையை, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த விமானத்தில் பயணம் செய்ய 74 பயணியர், காலை 4:30 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்து, விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.

ஆனால், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்து, பாதிப்புக்கு உள்ளானது. இதில் பயணித்த யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

எனினும், சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு காலை 6:00 மணிக்கு செல்ல வேண்டிய இந்த விமானம், தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஒரு மணி நேரம் கடந்தும் விமானம் எப்போது புறப்படும் என தகவல் தெரிவிக்காததால், பயணியர் அவதிக்குள்ளாகினர்.

தாமதம்



விமானத்தின் டயர் மாற்றப்பட்டு, ஐந்து மணி நேர தாமதத்திற்கு பின், காலை 11:09 மணிக்கு, 74 பயணியருடன், ஸ்பைஸ்ஜெட் விமானம் சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றது.

துாத்துக்குடிக்கு முதன் முதலாக காலை சேவையில் செல்ல ஆர்வமுடன் சென்னை விமான நிலையம் வந்த பயணியர், விமான டயர் வெடிப்பு காரணமாக ஏற்பட்ட தாமதத்தால் உற்சாகமின்றி காணப்பட்டனர்.

Advertisement