பருத்தி வார சந்தைக்கு 'பஞ்சு' மூட்டை வரத்து... குறைவு; உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைக்கு கோரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க பருத்தி வார சந்தையில், பஞ்சு மூட்டைகளின் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. இது குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து, உற்பத்தியை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.

மாவட்டத்தில் மானாவாரி மற்றும் இறவையில் விவசாயிகள் ஆண்டுதோறும் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பஞ்சு மற்றும் விதை ஆகிய இரு முறைகளில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.

விதையை நோக்கமாக கொண்டு சாகுபடி செய்யப்படும், வீரிய ரக ஒட்டு பருத்திக்கு பெரும்பாலும் தனியார் விதை நிறுவனங்களே விதை, உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வழங்குகின்றன.

பருத்தி விளைந்ததும் விதை, பஞ்சுகளை தனித்தனியாக பிரித்து, தனியார் விதை நிறுவனங்களே நேரடியாக கொள்முதல் செய்கின்றன.

பருத்தி வார சந்தை



இதுஒருபுறம் இருக்க பஞ்சு உற்பத்திக்கான பருத்தி சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையொட்டி, கள்ளக்குறிச்சி வேளாண்மை உற் பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ஆண்டுதோறும் டிசம்பர் முதல் ஜூன் மாதம் வரை பருத்தி வார சந்தை நடத்தப்படுகிறது. இது வாரந்தோறும் புதன்கிழமை நடக்கிறது. விவசாயிகள் கொண்டு வரும் பஞ்சு மூட்டைகளுக்கு வியாபாரிகளின் விலை நிர்ணயத்தில் திருப்தி, இல்லையெனில் மூட்டைகளை அங்கேயே வைத்து விட்டு, உரிய விலை கிடைக்கும் போது, விற்பனை செய்து கொள்ளும் வசதிகள் உள்ளன.

இங்கு ஆண்டுதோறும் கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நுாற்றுக்கணக்கான விவசாயிகள், வாரந்தோறும் எல்.ஆர்.ஏ., ரகம் மற்றும் கொட்டு ரக பஞ்சு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

அதேபோல ஆத்துார், மகுடஞ்சாவடி, திருப்பூர், அன்னுார், கோயம்பத்துார், கும்பகோணம், புஞ்சை புலியம்பட்டி, கொங்கனாபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பஞ்சு மூட்டைகளை கொள்முதல் செய்து செய்கின்றனர்.

இங்கு வாரந்தோறும் கோடிக்கணக்கான ரூபாயில் வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில், இந்தாண்டு வழக்கம் போல, பருத்தி வார சந்தை துவங்கிய நிலையில், விவசாயிகள் கொண்டு வரும் பஞ்சு மூட்டைகளின் வரத்து குறைந்ததால், இரு வாரங்களுக்கு ஒரு முறை என வார சந்தை நடத்தப்பட்டு வருகிறது.

வரத்து குறைவு



வழக்கமாக மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே வாரந்தோறும் ஆயிரக்கணக்கான பஞ்சு மூட்டைகள் வரத்தும், அதையொட்டி கோடிக்கணக்கில் வர்த்தகமும் நடைபெறும். ஆனால் தற்போது வரத்து முற்றிலும் குறைந்து காணப்படுவதால், வர்த்தகமும் குறைந்துள்ளது.

இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், 'பஞ்சு உற்பத்தி செய்யப்படும் பருத்தி சாகுபடியில், பராமரிப்பிற்கு அதிக பணம் செலவாகிறது. பஞ்சு எடுப்பதற்கு ஆட்களும் கிடைப்பதில்லை. இதனால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. தற்போது பருத்தி சாகுபடியை தவிர்த்து, மாற்று பயிர் சாகுபடியில் கவனம் செலுத்தி வருகிறோம்.

இதனாலயே, பஞ்சு மூட்டைகள் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது,' என்றனர். இது குறித்து இது குறித்து வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்து, உற்பத்தியை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement