கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பு சிறுமியருக்கு இலவச தடுப்பூசி

பெங்களூரு: பெண்களின் ஆரோக்கியத்துக்கு, மாநில அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்று நோயை தடுக்கும் வகையில், 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து சிறுமியருக்கு இலவசமாக தடுப்பூசி போட, அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி:

பெண்களுக்கு கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கிறது. ஹெச்.பி.வி., தடுப்பூசி, கர்ப்பப்பை புற்று நோயை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். இந்த தடுப்பூசியை தேசிய பொது தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கும்படி, மத்திய அரசிடம் கேட்டு கொள்ளப்படும்.

டில்லி, பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் பள்ளியிலேயே மாணவியருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதே போன்று நமது மாநிலத்திலும், இந்த தடுப்பூசி போடுவது குறித்து, முதல்வருடன் ஆலோசித்து இம்முறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

பொதுவாக, 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கு, ஹெச்.பி.வி., தடுப்பூசி போடுவதால், எதிர்காலத்தில் கர்ப்பப்பை புற்று நோயை தடுக்கலாம். சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தில், சோதனை முறையில் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த, அரசு ஆலோசிக்கிறது. இந்த விஷயத்தில் இம்மாவட்டம், முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்பது, அரசின் நோக்கமாகும்.

நடப்பாண்டு பட்ஜெட்டில், கல்யாண கர்நாடகாவின் ஐந்து மாவட்டங்களில், தடுப்பூசி திட்டம் அறிவித்து, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கு, தடுப்பூசி போடப்படும். வரும் நாட்களில் தடுப்பூசியின் விலை குறையலாம். அனைத்து சிறுமியருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பது, அரசின் விருப்பமாகும்.

இவ்வாறு கூறினார்.

Advertisement