தர்பூசணி பழங்களில் செயற்கை வண்ணமா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் பழக்கடைகள், கோடவுன்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்களில் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படுகிறதா என உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடை காலம் துவங்கிய நிலையில் மக்கள் தங்கள் உடலில் குறையும் நீர்ச்சத்துக்களை அதிகரிக்க பழங்கள், ஜூஸ்களை அதிகம் அருந்துகின்றனர். இதில் அதிக இடம் பிடிப்பது தர்பூசணி பழங்கள் தான்.

இதற்காக வெளி மாவட்டங்களிலிருந்து அதிகமான வியாபாரிகள் தர்பூசணி பழங்களை டன் கணக்கில் திண்டுக்கல்லுக்கு வாங்கி வந்து ரோட்டோரங்கள், பழக்கடைகள், கோடவுன்களில் வைத்து விற்கின்றனர். இதன் சுவையை அதிகரிக்கவும், உள் இருக்கும் பகுதியை அதிக சிவப்பாக காண்பிப்பதற்காகவும் சிலர் ஊசி மூலம் செயற்கை வண்ணங்களை தர்பூசணி பழங்களில் செலுத்துகின்றனர்.

இதை வாங்கி சாப்பிட்ட மக்கள் ஒவ்வாமை, மயக்கம், வாந்தி, வயிற்று போக்கு போன்ற பிரச்னைகளில் சிக்கி மருத்துவமனைகளில் அனுமதியாகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தர்பூசணி பழங்களின் விற்பனை தற்போது அதிகரித்துள்ள நிலையில் செயற்கை வண்ணங்கள் எங்கேயாவது பழங்களில் சேர்க்கப்படுகிறதா என ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் பித்தளைப்பட்டி, வத்தலக்குண்டு, நத்தம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோரங்களில் விற்பனை செய்யும் வியாபாரிகள், பழக்கடைகள், கோடவுன்களில் முதற்கட்டமாக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சிகப்பு நிறம், சுவைக்காக பழ வியாபாரிகள் தர்பூசணி பழங்களில் ஊசி மூலம் செயற்கை வண்ணங்களை செலுத்தக்கூடாது. கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement