கோடை குடிநீர் பற்றாக்குறையை போக்க தலைமை செயலர் தலைமையில் குழு

பெங்களூரு: கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க, தலைமை செயலர் தலைமையில் குழு அமைக்க அமைச்சரவை முடிவு செய்து உள்ளதாக, சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் கூறினார்.

பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி:

கலபுரகி ஜேவர்கி நரிபோலா கிராமத்தில் இருந்து பிரால் (பி) கிராமம் வரை 36 கி.மீ., துாரம்; கெல்லுார் (பி) கிராமத்தில் இருந்து ஜவலகா கிராஸ் வரை 30 கி.மீ., துாரத்திற்கு சாலை அமைக்க, கல்யாண கர்நாடக மண்டல மேம்பாட்டு ஆணையத்துக்கு நிதி ஒதுக்குவதற்கு ஒப்புதல்.

குடகு குஷால்நகர் தாலுகாவில் மசகோடு - கனிவே இடையில் 10 கி.மீ., துாரத்திற்கு பொதுப்பணி துறை சார்பில் சாலை அமைக்க அனுமதி கிடைத்து உள்ளது. விஜயபுரா சிந்தகியில் தாலுகா அலுவலகம் அமைக்க, ஏற்கனவே ஒப்புதல் கிடைத்து உள்ளது. ஆனால் பணிகள் நடக்கவில்லை. அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட முடிவு செய்யப்பட்டது.

கலாசார மையம்



பெங்களூரு ரூரல் ஆனேக்கல், ஹொஸ்கோட், மாண்டியா மலவள்ளியில் தாலுகா அலுவலகம் கட்ட, தலா 16 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு. பெங்களூரில் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வரும் பத்திர பதிவு மற்றும் முத்திரை தாள் துறையின் இரண்டு அலுவலகம்; 34 துணை பதிவு அலுவலகங்கள், சொந்த கட்டடத்திற்கு மாற்றப்படும். ஏற்கனவே அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் பழைய கட்டடங்கள் புதுப்பிக்கப்படும். இப்பணிகள் துறை அமைச்சர் ஒப்புதலுடன் நடக்கும்.

கர்நாடக மாநில சிறார் நீதி விதிகள் 2025ஐ அங்கீகரிக்க, அமைச்சரவை ஒப்புக்கொண்டு உள்ளது. இந்த விதிகள் மத்திய சட்டத்தின் வழிகாட்டுதல்படி முன்மொழியப்பட்டு உள்ளது.

ஆரோக்கிய சஞ்சீவினி திட்டத்தில் மாற்றம் செய்யப்படும். பெங்களூரு விகாஸ் சவுதா வளாக பகுதியில் காலியாக உள்ள நிலத்தில் 87 கோடி ரூபாய் செலவில் கலாசார மையம் கட்ட, பொதுப்பணி துறை ஒப்புதல் அளித்து உள்ளது.

அம்பேத்கர் பவன்



கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கவும், மாநிலத்தின் முக்கிய நீர்தேக்கங்களை நிர்வகிக்கவும், குடிநீருக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கவும் தலைமை செயலர் ஷாலினி தலைமையில் தொழில்நுட்ப பணியாளர்களை கொண்ட, குழுவை அமைக்க ஒப்புதல் அளித்து உள்ளது. தேவையான நேரத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து இந்த குழு முடிவு எடுக்கும்.

மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 194.80 கோடி ரூபாயில் 330 நிவாரண பணிகளை செயல்படுத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மைசூரு, 'முடா' சார்பில் அம்பேத்கர் பவன் கட்டும் பணி நடக்கிறது.

இதற்காக 23.83 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். கடந்த 1994ம் ஆண்டே அம்பேத்கர் பவன் கட்ட முடிவு எடுக்கப்பட்டது. அப்போது பணிக்காக செலவு 17 கோடி ரூபாய் தான். இப்போது 40 கோடி ரூபாயை தாண்டி உள்ளது. இதற்கு அரசு மாறியது தான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement