குடும்ப அரசியலுக்கு மேலிடம் ஆதரவு பா.ஜ.,வில் நீக்கப்பட்ட எத்னால் விரக்தி

பெங்களூரு: 'குடும்ப அரசியலுக்கு பா.ஜ., மேலிடம் ஆதரவு அளித்தது வருத்தமாக உள்ளது' என்று, எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

அவரது, 'எக்ஸ்' தள பதிவு:

கர்நாடகாவில் பா.ஜ.,வின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்த கலபுரகி, கொப்பால், ராய்ச்சூர், பல்லாரி, சிக்கோடியில் கட்சியை தோல்வி அடைய செய்து பலவீனப்படுத்தி, சுயநல அரசியல் செய்தவர்கள் மீது கட்சி மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடும்ப அரசியல், உள்ஒப்பந்த அரசியல் செய்தவர்களுக்கு எதிராக குரல் கொடுத்த என்னை கட்சியை விட்டு நீக்கி உள்ளனர்.

சமரச அரசியல்



கட்சிக்கு எதிராக வெளிப்படையாக பேசி, காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்ட இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன். முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை மகன் பரத், ஷிகாவியில் தோல்வி அடைந்ததும் சமரச அரசியலால் தான்.

வக்பு வாரியத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி, விவசாயிகளுக்கு நீதியை உறுதி செய்தேன். ஆளுங்கட்சியை தனியாக எதிர்கொண்டேன். நாங்கள் சமர்பித்த ஆவணங்களை பார்லிமென்ட் வக்பு கமிட்டி குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் பாராட்டினார். துணை முதல்வர் சிவகுமார் மீதான சொத்து குவிப்பு வழக்கிற்காக, எனது சொத்துகளை விற்று அதில் கிடைத்த பணத்தை செலவு செய்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்துகிறேன்.

முள்ளாக இருந்தேன்



சுயநலவாதிகளுக்கு நான் முள்ளாக இருந்தேன். முதலில் தேசம், அடுத்து கட்சி, கடைசியாக சுயமரியாதை என்று இருந்தேன். குடும்ப அரசியலுக்கு பா.ஜ., மேலிடம் ஆதரவு அளித்தது வருத்தமாக உள்ளது.

இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

மடாதிபதி எச்சரிக்கை



எத்னாலுக்கு ஆதரவாக கட்சியின் சில தலைவர்களும், குரல் கொடுக்க ஆரம்பித்து உள்ளனர். எத்னாலை கட்சியில் இருந்து நீக்கிய உத்தரவை, வரும் 10ம் தேதிக்குள் பா.ஜ., திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் தீவிர போராட்டம் நடத்துவோம் என்று, மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமி எச்சரித்து உள்ளார்.

Advertisement