ஸ்மார்ட் மீட்டர் டெண்டரில் முறைகேடு இல்லை மின் துறை அமைச்சர் ஜார்ஜ் திட்டவட்ட மறுப்பு

பெங்களூரு: ''ஸ்மார்ட் மீட்டர் டெண்டரில், எந்த முறைகேடும் நடக்கவில்லை. பா.ஜ.,வின் குற்றச்சாட்டில் உண்மையில்லை,'' என மின் துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்தார்.
பெஸ்காம் எல்லைக்கு உட்பட்ட எட்டு மாவட்டங்களில், 'வீடுகள், கடைகள், கட்டடங்களில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை துல்லியமாக கணக்கிட்டு, தானாகவே மின்சாரம் வழங்கும் நிறுவனத்துக்கு அனுப்பும், ஸ்மார்ட் மீட்டரை கட்டாயம் பொருத்த வேண்டும் என அமல்படுத்தியது.
குற்றச்சாட்டு
இதற்கான உத்தரவு, கடந்த மாதம் 15ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. ஸ்மார்ட் மீட்டரின் விலை 4,998 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தற்கு, பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
பா.ஜ., --- எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா, 'ஸ்மார்ட் மீட்டர் டெண்டரில், 15,568 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது' என்று குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலளித்து பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று மின் துறை அமைச்சர் ஜார்ஜ் அளித்த பேட்டி:
கே.இ.ஆர்.சி., எனும் கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி, புதிய வீடுகளுக்கும், கட்டுமான பணியில் உள்ள கட்டடங்களுக்கும் தற்காலிகமாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுகிறது.
இதற்காகவே, டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஏலத்தில், ராஜஸ்ரீ என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிறுவனம், மென்பொருள் சேவை நிறுவனமான பி.சி.ஐ.டி.எஸ்., நாட்டின் பல்வேறு மாநிலங்களின் 23 மின் வினியோக நிறுவனங்களுக்கு தனது சேவையை வழங்கி வருகிறது. எந்த அரசும், இந்நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்கவில்லை.
உத்தர பிரதேசம் 'பூர்வாஞ்சல்' மின் வினியோக நிறுவனம், 2023 ஜனவரி 6ம் தேதி முதல் 2025 ஜனவரி 5ம் தேதி வரை எந்தவித டெண்டரில் பங்கேற்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தடை உத்தரவு நீங்கிய பின்னரே, இந்நிறுவனத்துடன், ராஜஸ்ரீ என்டர்பிரைசஸ் ஒப்பந்தம் செய்தது. எனவே, முறைகேடு நடந்துள்ளதாக கூறுவது பொய்.
இவ்விஷயமாக, சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ.,வினர் கேள்வி எழுப்பியபோது, மறுநாள் பதிலளிப்பதாக தெரிவித்திருந்தேன். மறுநாள் இது பற்றி விளக்கம் அளிக்க, சபாநாயகரிடம் அனுமதி கேட்டேன். அதற்கு அவர், முதல்வர் பட்ஜெட் மீதான பதில் அளித்ததும், பேசுங்கள் என்றார்.
இந்த நேரத்தில் தான் பா.ஜ.,வினர் ரகளையில் ஈடுபட்டு, சபையை நடத்த விடாமல் செய்தனர். என்னை பேச விடாமல் பா.ஜ.,வினர் ஈடுபட்டனர். இதை மறைத்து, என் மீது பழி சுமத்துகின்றனர்.
மத்திய அரசின் 'ஆர்.டி.எஸ்.எஸ்., எனும் திருத்தப்பட்ட வினியோக துறை திட்டம்' அமலாகி இருந்தால், மாநிலத்தில் உள்ள அனைத்து மின் வினியோக நிறுவனங்களும், அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த உத்தரவிட்டிருக்கும்.
ஆனால், பொது மக்களின் நலன் கருதி, புதிதாக கட்டும் வீடுகளுக்கும், கட்டுமான பணியில் உள்ள கட்டடங்களுக்கு தற்காலிகமாக மட்டுமே ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுகிறது.
மேலும், புதிய வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதை பராமரிப்பதற்கான கட்டணத்தை வாங்கவில்லை. இந்த கட்டணத்தை, பெஸ்காமே ஏற்றுக் கொள்ளும்.
மாநிலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் மீட்டர்கள், ரேடியோ அலைவரிசை மற்றும் ஜி.பி.ஆர்.எஸ்., தொழில்நுட்பம் மூலம் இயங்கும். பெஸ்காம் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு வல்லுனர்கள், இதை தீர ஆராய்ந்த பின்னரே, மீட்டருக்கு இத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பத்து ஆண்டுகள்
பத்து ஆண்டுகளுக்கு, மாதந்தோறும் ஸ்மார்ட் மீட்டரின் தொழில்நுட்ப பராமரிப்புக்கு, மத்திய அரசின் மானியம் உட்பட மஹாராஷ்டிராவில் 120.34 ரூபாயும்; மேற்குவங்கத்தில் 117.81 ரூபாயும்; சிக்கிமில் 148.88 ரூபாயும்; மணிப்பூரில் 130.30 ரூபாயும்; மத்திய பிரதேசத்தில் 115.84 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், கர்நாடகாவில் 116.64 ரூபாய் மட்டுமே வாங்கப்படும்.
எனவே, கர்நாடகாவில் ஸ்மார்ட் மீட்டர் கட்டணம் அதிகம் என்று கூறும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.