தத்த பீடம் நிர்வகிக்க மாவட்ட குழு சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு பதில்

'சிக்கமகளூரு தத்த பீடத்தை நிர்வகிக்க மாவட்ட அளவிலான குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது' என்று, உச்சநீதிமன்றத்தில், கர்நாடக அரசு பதில் அளித்துள்ளது.

சிக்கமகளூரு பாபாபுடன் கிரி மலையில் தத்தா குகைக்கோவிலில் தத்தாவின் பாதம் உள்ளது. ஹிந்து, முஸ்லிம் பக்தர்கள் இந்த கோவிலில் வழிபாடு நடத்துகின்றனர். தத்தா கோவிலை ஹிந்துக்களின் சொத்து என அறிவிக்க வேண்டும் என்று, பல ஆண்டுகளாக ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தத்தா பாதத்திற்கு பூஜை செய்ய அரசு, முஜாவரை நியமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு உத்தரவை ரத்து செய்து கடந்த 2023 மார்ச் 6 ல் தீர்ப்பு கூறியது.

இதனை எதிர்த்து அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார், விஸ்வநாதன் விசாரிக்கின்றனர். நேற்று விசாரணை நடந்தது.

அரசு சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், 'தத்த பீடத்தை நிர்வகிக்க மாவட்ட அளவிலான குழு அமைப்பது குறித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தலைமையிலான அமைச்சரவை துணை குழு முடிவு செய்து உள்ளது. மார்ச் 19 ம் தேதி, வருவாய் துறை முதன்மை செயலர் ராஜேந்திர கட்டாரியா தலைமையில் மத நல்லிணக்க கூட்டம் நடத்தப்பட்டது.


'சட்டம் - ஒழுங்கை பராமரிக்க இரு மதங்களின் நடைமுறை, மரபுகளை பராமரிப்பது அவசியம். மாவட்ட அளவிலான குழுவில் கலெக்டர் தலைவராகவும், எஸ்.பி., சி.இ.ஓ., ஆகியோர் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பர்' என்றார்

- நமது நிருபர் -.

Advertisement