'புதுமையாக சிந்திப்பவர்கள் வெற்றியாளராக உருமாறுவர்'

'மாணவ -- மாணவியர் புதுமையாக சிந்திக்க வேண்டும். அப்போது தான் வெற்றியாளராக மாற முடியும்,'' என ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு அறிவுரை வழங்கி உள்ளார்.
தமிழகம், மதுரையில் நேற்று முன்தினம் நடந்த, மாணவர்களுக்கான, 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில், பெங்களூரை சேர்ந்த ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு பேசியதாவது:
டாக்டர் அப்துல்கலாம் எழுதிய 'அக்னி சிறகுகள்' புத்தகத்தை படித்த பின், விஞ்ஞானியாகும் ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது.
நம் நாட்டில் டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் 50 ஆய்வுக் கூடங்கள் இயங்குகின்றன. டி.ஆர்.டி.ஓ., மூலம் முப்படைகளுக்கு தேவையான ராணுவ தடவாளங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் சில பாதுகாப்பு உபகரணங்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அரங்கில் ஒரு நாடு, வளர்ச்சியடைந்த நாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றால் பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், ராணுவம் தொழில்நுட்பம் போன்றவற்றில் முன்னேற்றம் அடைந்திருக்க வேண்டும்.
அப்படி, ராணுவ தொழில்நுட்பத்தில் முக்கியமான வளர்ச்சியாக கருதப்படுகிற போர் விமான இன்ஜின் தயாரிப்பில் இந்தியாவும் ஈடுபட்டு உள்ளது என்பது பெருமைக்குரிய விஷயம். வேளாண், பொறியியல், மருத்துவம் என எதை தேர்வு செய்து மாணவ - மாணவியர் படித்தாலும், அதில் புதுமையாக சிந்திக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். புதுமையான விஷயங்களை கற்று கொள்பவர்களும், சிந்திப்பவர்களும் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியாளராக திகழ்கின்றனர்.
ஜெ.இ.இ., மெயின் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், டி.ஆர்.டி.ஓ.,வில் 1.20 லட்சம் ரூபாய் உதவித் தொகையுடன் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்
- நமது நிருபர் -.