இரவில் திடீர் 'டேக் டைவர்சன்' மின் விளக்கு இல்லாததால் ஆபத்து

சென்னை:சென்னையில், மெட்ரோ ரயில் பணி, வடிகால், கால்வாய் மற்றும் சாலையில் நடைபெறும் இதர கட்டுமான பணிகளுக்காக, போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதுவும், நான்கு வழி சாலையை இரண்டு வழியாகவும், இரண்டு வழி சாலையை ஒரு வழி சாலையாகவும் மாற்றப்படுகிறது.
மேலும், பல பிரதான சாலைகளில் சிக்னல்களை அகற்றிவிட்டு, 200 முதல் 500 அடி துாரம் வரை கடந்து சென்று, யு - டர்ன் செய்து செல்லும் வகையில், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, இரவு நேர பணிகளுக்காக திடீரென போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால், எளிதில் தெரியும் வகையில் எச்சரிக்கை பலகையோ எச்சரிக்கை விளக்குகளோ அமைப்பதில்லை. இதனால், விபத்துகள் அதிகரிக்கின்றன.
பத்து நாட்களுக்குமுன், அடையாறு மேம்பாலம் துவங்கும் இடத்தில் வைத்த தடுப்பு தெரியாமல், நள்ளிரவில் அதில் மோதி ஒரு வாலிபர் பலியானார். இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., அண்ணாசாலை, போரூர், மதுரவாயல் போன்ற பகுதிகளில், சாலை தடுப்பு தெரியாமல் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
ஒற்றை சிக்னல்
இது குறித்து, போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
கட்டுமான பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யும்போது, அதில் எச்சரிக்கை விளக்கு அமைப்பதை அந்தந்த கட்டுமான நிறுவனம் ஏற்க வேண்டும். அவர்களின் அலட்சியத்தால் விபத்துகள் நடக்கின்றன.
நெரிசலையும், சிக்னலில் காத்திருப்பு நேரத்தையும் தடுக்க, யு - டர்ன் அமைத்துள்ள பகுதிகளில், காவல்துறை சார்பில், மிளிரும் மஞ்சள் விளக்கு அமைக்க வேண்டும். சிக்னல் அமைக்கும் நிதியில், ஒற்றை மஞ்சள் விளக்கு வாங்கிதர இரண்டு ஆண்டுகளாக கேட்கிறோம்.
சில வணிக நிறுவனங்கள், நன்கொடையாக வாங்கி தரும் விளக்குகளை, சில இடங்களில் அமைத்துள்ளோம்.
போக்குவரத்து மாற்றம் செய்த பகுதிகளில், எச்சரிக்கை அடையாள குறியீடு அமைக்கவும், ஒற்றை சிக்னல் அமைக்கவும் தேவையான நிதி ஒதுக்க, உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
-
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் சாதனை: பிரதமர் பாராட்டு
-
பணியாளர்கள் 600 பேரை வெளியேற்றியது ஸொமேட்டோ