பகிரங்கம்! 1974, 1976 அரசுகளே மீனவர் பிரச்னைக்கு காரணம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 'புட்டு' வைத்தார்

'தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதற்கு, 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில், அப்போதைய மத்திய அரசு எடுத்த முடிவுகள் தான் மூலக்காரணமாக அமைந்து விட்டன. இருப்பினும், மீனவர்கள் விஷயத்தில் மனிதாபிமான முறையில் நடந்து கொள்ளும்படி இலங்கை அரசிடம் பேசி வருகிறோம்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது, தி.மு.க., - எம்.பி., சிவா பேசியதாவது:
மத்திய அரசு அளித்திருக்கும் தகவல்களின்படி, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறைகளில் இருப்பவர்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றைச் சேர்ந்த மீனவர்கள்தான் அதிகம் என்பது தெரிய வருகிறது.
மொத்தம் 97 பேர்
வறிய நிலையில் உள்ள மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும்போது, அவர்களுக்கு கடல் எல்லை எதுவென்று சரியாக கணிக்க முடியாமல் சில நேரங்களில் எல்லை தாண்டி சென்று விடுகின்றனர்.
அவ்வாறு செல்லும் மீனவர்களை கைது செய்தாலும் பரவாயில்லை. அவர்கள் தாக்கப்படுகின்றனர். சில நேரங்களில் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.
எனவே, இந்த நிலையை மாற்றி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களில் அதிகம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என சிவா குறிப்பிடுகிறார்.
நேற்று முன்தின நிலவரப்படி இலங்கை சிறைகளில் 86 தமிழக மீனவர்கள் இருக்கின்றனர். நேற்று மேலும் ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்படி, 11 மீனவர்கள் மேலும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, மொத்தம், 97 பேர் இலங்கை சிறையில் உள்ளனர்.
இவர்களில் 83 பேர் தண்டனை குற்றவாளிகள். மூன்று பேர் மீது விசாரணை நடந்து வருகிறது. தவிர, 11 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசு இரண்டு சட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது.
ஒன்று 1996ல் கொண்டு வரப்பட்ட மீன் மற்றும் கடல்வாழ் வளங்கள் சட்டம்.
மற்றொன்று, 1979ல் கொண்டு வரப்பட்ட அன்னிய மீன்பிடி படகுகள் குறித்த மீன்வள ஒழுங்குமுறை சட்டம்.
கடும் தண்டனை
இவை இரண்டுமே 2018, 2023ல் திருத்தம் செய்யப்பட்டன.
அதன்படி, எல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கு கடுமையான தண்டனை, அபராதம் மற்றும் நீண்டநாள் சிறை ஆகியவற்றை அளிக்க முடியும்.
அதிலும், தற்போது சிறைகளில் உள்ளவர்களில் பலரும் படகு உரிமையாளர்கள் அல்லது மீண்டும் மீண்டும் குற்றம் செய்கிறவர்கள். இதனால்தான், இந்த விவகாரம் தீர்வை நோக்கிச் செல்ல முடியாமல், மேலும் சிக்கலை உண்டாக்கி வருகிறது.
இரண்டு முடிவுகள்
இந்த பிரச்னை முதலில் உருவானது, 1974ல். அப்போதைய மத்திய அரசு, சர்வதேச கடல் எல்லைக் கோட்டை, மாநில அரசுகளை கலந்து ஆலோசித்து வரையறுத்தது.
இன்னொன்று 1976ல், யார் எந்த பகுதியில் மீன்பிடித்துக் கொள்வது என்பது தொடர்பாக, இந்தியா - இலங்கை இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்கள்.
முந்தைய மத்திய அரசுகளின் இந்த இரண்டு முடிவுகள் தான், தற்போதைய மீனவர் பிரச்னைக்கு மூல காரணம். இருப்பினும், தற்போது மீனவர்கள் பிரச்னையில், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும்படி தொடர்ச்சியாக துாதரக அளவில் இலங்கை அரசிடம் பேசி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த 1974, 1976 ஆண்டுகளில் மத்தியில் பிரதமர் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.
தமிழக எம்.பி., திடீர் கோரிக்கைலோக்சபாவில், ஜோதிமணி, கரூர் எம்.பி., பேசுகையில், ''திருச்சி - கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை, நீண்டகாலமாக இருவழிப் பாதையாக உள்ளது. அதை நான்குவழிப் பாதையாக மாற்ற வேண்டும். தமிழகத்தின் முக்கிமான மையப்பகுதியில் இந்த சாலை உள்ளது. கரூர், திருப்பூர், கோவை போன்ற முக்கிய ஏற்றுமதி தொழில் நகரங்கள் பயன்படுத்தும் சாலையாகவும் இது இருந்து வருகிறது. கோவை - கரூர் இடையில், நான்குவழிச் சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கு நன்றி. அதேபோல திருச்சி - கரூர் சாலை காவிரி ஆற்றை ஒட்டி வருவதால், மாற்றுப்பாதையாக கிரீன்பீல்டு அலைன்மென்ட் தேவை. அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், திடீரென அது நிறுத்தப்பட்டு விட்டது. எனவே, இது தொடங்கப்பட்டு, திருச்சி - கரூர் - கோவை இடையே நான்குவழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட வேண்டும்'' என்றார்.திருவண்ணாமலை எம்.பி., அண்ணாதுரை பேசுகையில்,'' கடந்த வாரம், எம்.பி.,க்களுக்கு, சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த, 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதியையும் மத்திய அரசு விடுவிக்க வேண்டும். தமிழகத்திற்கு கடந்த 4 மாதங்கள் 4,000 கோடி ரூபாய் வரை நிலுவையில் உள்ளது. மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி தர வேண்டும். எம்.பி.,க்களுக்கான சம்பளத்தைக்கூட நிறுத்திவிட்டு, தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகரித்து வழங்க வேண்டும். எம்.பி.,க்கள் சம்பளத்தைவிட, நாட்டு நலனே முக்கியம். எனவே நிலுவை நிதியை விடுவிக்க வேண்டும்'' என்றார்.
- நமது டில்லி நிருபர் -






