அரசு பஸ்சில் தவறவிட்ட ரூ.1 லட்சம் ஒப்படைப்பு

மதுரை : மதுரை கோட்டஅரசு பஸ்சில் தவறவிட்ட ரூ. ஒரு லட்சம் பணத்தை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

திருச்சியைச் சேர்ந்த ஆடு வியாபாரி ஒருவர் த.நா. 58 என் 2639 அரசு பஸ்சில் திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு வந்தார். ஆடு விற்ற பணம் ரூ.ஒரு லட்சத்தை இடுப்பில் கட்டியிருந்தார்.

மாட்டுத்தாவணியில் இறங்கி சிறிது துாரம் சென்றபின் இடுப்பில் பணக்கட்டு இல்லாததை உணர்ந்த அவர், திரும்பி வந்து பார்ப்பதற்குள் பஸ் டிப்போவுக்கு சென்றுவிட்டது. இதுகுறித்து அங்குள்ள போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.

அவர்கள் டிப்போவிற்கு தகவல் தெரிவித்து பஸ்சில் சோதனையிட்டனர். அவர் பயணித்த இருக்கையின் கீழ் பணக்கட்டு இருந்தது தெரிந்தது.

போக்குவரத்து துணை மேலாளர் (வணிகம்) சதீஷ் குமார் முன்னிலையில் பயணியின் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு, அவரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

கிளை மேலாளர் ராமசாமி, நடத்துனர் தாமஸ் பிரிட்டோ, ஓட்டுனர் சுரேஷ் குமார், கிளார்க் ராஜசேகர் உடனிருந்தனர்.

Advertisement