இந்தியா என்ன தர்மசாலையா: அமித் ஷா குடியேற்ற மசோதா லோக்சபாவில் நிறைவேறியது
புதுடில்லி: ''இந்தியா என்ன தர்மசாலையா? யார் வேண்டுமானாலும் இங்கு வந்து நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு வருவோரைக் கட்டுப்படுத்த, கண்காணிக்க தற்போது பாஸ் ோர்ட் சட்டம் -- 1920, வெளிநாட்டினர் பதிவு சட்டம் - 1939, வெளிநாட்டினர் சட்டம் - 1946 மற்றும் குடியுரிமை சட்டம் என, பல சட்டங்கள் உள்ளன.
இவற்றை ஒருங்கிணைக்கும் வகையிலும், தற்போதைய மற்றும் எதிர்காலத்துக்கு உகந்த வகையிலும், புதிதாக குடியேற்றச் சட்டம் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதா லோக்சபாவில் நேற்று நிறைவேறியது.
இந்த மசோதாவின் மீது லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தின்போது, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவரை வரவேற்கிறோம். அதுபோல, கல்வி, மருத்துவ சிகிச்சை, ஆராய்ச்சி, தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக வருவோரையும் வரவேற்கிறோம். அதே நேரத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கத்தோடு வருவோரை, சட்டவிரோதமாக வருவோரை அனுமதிக்க முடியாது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசு, தவறான நோக்கத்தோடு வருவோரை அனுமதிக்காது.
இந்தியா என்ன தர்மசாலையா? யார் வேண்டுமானாலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வந்து, நம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த எப்படி அனுமதிக்க முடியும்?
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய அம்சங்கள்
வெளிநாட்டில் இருந்து வருவோர் தங்கள் வருகையை கட்டாயமாக பதிவு செய்வது, அவர்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு இந்த சட்டம் உதவும்.
பாஸ்போர்ட் அல்லது விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைபவர்களுக்கு, ஐந்து ஆண்டுகள் வரை சிறை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க மசோதா வழி செய்கிறது
விசா காலம் முடிந்தும் தங்கியிருப்போர், தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை, 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
பேரிடர் நிர்வாக திருத்த மசோதா - 2024 மற்றும் ரயில்வே திருத்த மசோதா - 2024 ஆகியவை, லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேறின. நீண்ட இழுபறிக்குப் பின், ராஜ்யசபாவிலும் இந்த மசோதாக்கள் நிறைவேறின.இந்த மசோதாக்களில், நாட்டின் சுதந்திரத்தை குறிக்கும் வகையில், 75 ஆண்டுகள் என்பது குறிப்பிடப்பட்டிருந்தன. தற்போது, அதை 76 ஆண்டுகள் என்ற திருத்தத்துடன், லோக்சபாவில் நேற்று மீண்டும் நிறைவேற்றப்பட்டன.இந்த மசோதாக்கள், 2024ல் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது இந்த மசோதாக்கள் 2025 என்று மாற்றப்பட்டுள்ளன.ஏற்கனவே நான்கு ஆண்டுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பின், இந்த மசோதாக்கள் சட்டமாக உள்ளன.