முகாமில் அகதிகளை பட்டினி போட்ட ஒப்பந்ததாரர்; சமரசம் செய்த அதிகாரிகள்

ராமநாதபுரம்; அரசு 2.65 கோடி ரூபாய் பாக்கி வைத்ததால், உணவு வினியோகத்தை நிறுத்தி, இலங்கை அகதிகளை பட்டினி போட்ட ஒப்பந்ததாரருடன், அதிகாரிகள் சமரசம் பேசினர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமில் இலங்கை அகதிகள் 324 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மண்டபம் பகுதியைச் சேர்ந்த சரவணன், 45, இதற்கான ஒப்பந்தம் எடுத்துள்ளார். இவருக்கு, அகதிகளுக்கு உணவு வழங்கியதற்காக, 2023ல், 96 லட்சம் ரூபாய் அரசால் வழங்கப்பட்டது.
அதன் பிறகு தொடர்ந்து உணவு வழங்கிய வகையில், 2.65 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. பலமுறை கேட்டும் அரசு பணம் வழங்கவில்லை. சரவணன், உணவு வினியோகத்தை நிறுத்துவதாக கூறியபோது, வழக்குப்பதிவு செய்வோம் என, அதிகாரிகள் அவரை மிரட்டியுள்ளனர்.
இதனால் கடுப்பான சரவணன், நேற்று முன்தினம், அகதிகளுக்கு உணவு வழங்குவதை நிறுத்தியுள்ளார். இதனால் அகதிகள் பட்டினியில் தவித்தனர். இதையறிந்த, மண்டபம்முகாம் பொறுப்பு சப் - கலெக்டரான மாவட்ட வழங்கல் அதிகாரி இளங்கோவன், சரவணனிடம் பேச்சு நடத்தினார். பணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தபின், நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு மேல், அகதிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
ஒப்பந்ததாரர் சரவணன் கூறியதாவது: 324 பேருக்கும் 3 வேளை உணவு வழங்கி வருகிறேன். பாக்கி தொகை 2.65 கோடி ரூபாய் அரசு வழங்க வேண்டியுள்ளது. பல முறை முறையிட்டும் பணம் வழங்காமல் இழுத்தடித்தனர்.
ஏப்., 5 முதல் உணவை நிறுத்த திட்டமிட்டு அதிகாரிகளுக்கு கடிதம் அளித்தேன். என் மீதும், உணவு வழங்கும் பணியாளர் மீது வழக்குப்பதிவு செய்வதாக அதிகாரிகள் மிரட்டினர். அதற்கு பணியாததால் சமரசத்திற்கு வந்தனர். பணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் உணவு வழங்கி வருகிறேன் என்றார்.






மேலும்
-
த.வெ.க., பேனர் அகற்றம்
-
177 சவரன் தங்க நகைகள் மோசடி வழக்கு 'கமிஷன் ஏஜன்ட்'டின் சகோதரர் கைது
-
பரந்துார் விமான நிலையம் இந்த வாரம் திட்ட அனுமதி
-
கழிவுநீர் குழாய் பதிப்பு பணி முடிந்தும் சாலைகளை சீரமைக்காததால் அவதி துரைப்பாக்கம், சாய் நகர்வாசிகள் பரிதவிப்பு
-
திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் முகப்பேர், அம்பத்துார் தோல்வி
-
மருத்துவமனை ஊழியரை தாக்கிய மூன்று பேர் கைது