போலீஸ்காரர் கொலையில் தேடப்பட்ட கஞ்சா வியாபாரி மீது துப்பாக்கிச்சூடு

15

மதுரை: உசிலம்பட்டியில் போலீஸ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணன், போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தார். அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் டிரைவராக இருந்தவர், கடந்த 27 ல் நண்பர் ராஜாராம், 31, என்பவருடன், முத்தையம்பட்டி மதுக்கடையில் மது வாங்கி அருகில் உள்ள கடையில் குடிக்க சென்றார். அங்கு தேனி மாவட்ட கஞ்சா வியாபாரி நாவார்பட்டி பொன்வண்ணன் உள்ளிட்ட சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.


பொன்வண்ணன் ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால், அவருக்கு முத்துக்குமார் அறிவுரை கூறினார். இதுதொடர்பாக, அவருக்கும், பொன்வண்ணன் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், முத்துக்குமார் தாக்கப்பட்டார். இதுகுறித்து, போலீசாருக்கு மொபைல் போனில் முத்துக்குமார் தகவல் தெரிவித்தார்.


போலீசார் வருவதை அறிந்து தகராறு செய்தவர்கள் டூ - வீலர், மொபைல் போன் உள்ளிட்டவற்றை விட்டு தப்பினர். முத்துக்குமாரை வீட்டிற்கு செல்லுமாறு கூறிவிட்டு, போலீசார் சென்றனர். பின்னர், முத்துக்குமாரும், ராஜாராமும் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து வந்த கும்பல், இருவரையும் ஆயுதங்களால் தாக்கியது.


கீழே விழுந்த முத்துக்குமார் தலையில் கல்லை போட்டுக் கொலை செய்தது கும்பல். ராஜாராம் படுகாயமடைந்தார். கொலை தொடர்பாக, பொன்வண்ணன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்தனர்.


இந்நிலையில் பொன்வண்ணன் தேனி மாவட்டம் கம்பம் அருகே போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தார். உடனடியாக, அவருக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு ஆண்டிப்பட்டி அருகே உள்ள கானா விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பொன்வண்ணனை போலீசார் அழைத்துச் சென்றனர்.

Advertisement