நிலநடுக்கத்திற்கு மத்தியில் பூத்த மலர்; சாலையில் பெண்ணுக்கு பிரசவம்

பாங்காங்: பாங்காங்கில் நிலநடுக்கத்திற்கு மத்தியில், மருத்துவ ஊழியர்கள் தெருவில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, தாய், சேய் இருவரையும் காப்பாற்றிய சம்பவம் நெகிழச் செய்துள்ளது.


மியான்மரில் நேற்று ஏற்பட்ட இரு அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வானுயர கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 2,000க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியா உள்பட பல நாடுகளில் உணரப்பட்டாலும், தாய்லாந்திலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாங்காங்கில் உள்ள பல அடுக்குகளை கொண்ட கட்டடம் ஒன்று சீட்டு கட்டைப் போல சரிந்து விழுந்தது.

இந்த நில அதிர்வுகளால் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்த சம்பவம் உலக நாடுகளிடையே கவலையை அளித்திருந்தாலும், தற்போது நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது


பாங்காங்கில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் போலீஸ் ஜெனரல் மருத்துவமனையின் வெளிப்பகுதியில், தெருவில் கர்ப்பிணிக்கு மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக பிரசவம் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், படுக்கை ஒன்றில் பெண் ஒருவர் படுத்திருக்கிறார். அவரை சுற்றிலும் மருத்துவ ஊழியர்கள் திரண்டு நின்று அந்தப் பெண்ணுக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்து முடித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement