மியான்மர் புறப்பட்டது 80 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை : வெளியுறவு அமைச்சர் தகவல்

1

புதுடில்லி: நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டுக்கு உதவி செய்வதற்காக, 80 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

மியான்மர் நாட்டில் நேற்று இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகின. இதில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியுள்ளது. 2000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 80 பேர் கொண்ட குழு மியான்மருக்கு புறப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

இது குறித்து ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாதாவது:

தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எப்) அணியின் 80 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு, மியான்மரின் நய்பிடாவ் நகருக்கு இன்று புறப்பட்டது. இவர்கள் அங்கு ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்புகளில் மீட்பு மற்றும் உதவி பணிகளில் ஈடுபட உள்ளனர்.

இந்த அணியில், மீட்பு நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அரசு மியான்மருக்கு மனிதாபிமான உதவியாக இந்த அணியை அனுப்பியுள்ளது. மருந்து பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஜெய்சங்கர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement