100 நாள் வேலை திட்டம் தி.மு.க.,வினர்  ஆர்ப்பாட்டம் 

அயப்பாக்கம், தமிழகத்தில், ஊராட்சிகளில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்திற்கு, நான்கு மாதங்களுக்கு மேலாக மத்திய அரசு நிதி வழங்கவில்லை. தமிழகத்திற்கு ஏறக்குறைய 4,034 கோடி ரூபாய் நிதி வழங்காததால், அதன் வாயிலாக பயனடைந்து வந்த பெண்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், உடனடியாக மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்க வேண்டும் எனக்கூறி, தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், அயப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

இதில், கட்சி நிர்வாகிகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிலர், கையில் மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்டவற்றுடன் பங்கேற்றனர். மேலும், மத்திய அரசுக்கு எதிராக கண்டன பதாகைகளை ஏந்தி, கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, அப்பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement