2,000 பேர் அமரும் மண்டபம் கிண்டியில் கட்ட முடிவு
சென்னை,
''கிண்டியில் உள்ள, 7 ஏக்கர் இடத்தில், 2,000 பேர் அமரக்கூடிய பிரமாண்டமான மண்டபம் கட்டப்படும்,'' என, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கூறினார்.
சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட, கிண்டி, அருளாயன்பேட்டையில், அரசுக்கு சொந்தமான 7 ஏக்கர் இடம் உள்ளது.
இதில், சி.எம்.டி.ஏ., நிதியில், பல்நோக்கு மையம் கட்டுவது தொடர்பாக, நேற்று, அமைச்சர்கள் வேலு, சேகர்பாபு, சுப்பிரமணியன் ஆகியோர், களஆய்வு செய்தனர்.
அமைச்சர் வேலு கூறியதாவது:
இந்த 7 ஏக்கர் இடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர, மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டோம்.
கிண்டியில் சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த சமுதாய கூடம் இல்லை. பல மண்டபங்களில் வாகன நிறுத்தம் வசதி இருப்பதில்லை. இந்த இடத்தை பொறுத்தமட்டில், வாகன நிறுத்தத்துடன், 2,000 பேர் அமரக்கூடிய வசதியுடன் திருமண மண்டபம் கட்டலாம் என ஆலோசித்துள்ளோம்.
இதற்கு, சி.எம்.டி.ஏ., நிதி வழங்க தயாராக உள்ளது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வசதியும் உள்ளது.
இந்த மண்டபத்தை கட்டி முடித்தால், தென்சென்னை, மத்திய சென்னை மற்றும் அதை ஒட்டி உள்ள புறநகர் மக்கள், திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடத்த முடியும். மண்டபம் கட்டுவது தொடர்பாக, சட்டசபையில் முறையாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் பிரபாகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.