அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாயிகள் அவதி
அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாயிகள் அவதி
அரூர்: அரூர் பகுதியில் தொடரும் மின்வெட்டால், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த செல்லம்பட்டி, கீழானுார், சங்கிலிவாடி, செல்லம்பட்டி புதுார், ஈட்டியம்பட்டி, எச்.ஈச்சம்பாடி, கே.வேட்ரப்பட்டி, கணபதிப்
பட்டி, பறையப்பட்டி, கீழ்மொரப்பூர், தாமரைகோழியம்பட்டி, வேப்பநத்தம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், பல ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக தொடரும் மின்வெட்டால் அவதிக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: நடப்பாண்டு, நல்ல மழை பெய்ததால், ஆழ்துளை மற்றும் கிணற்று பாசனம் மூலம் நெல், கரும்பு, மஞ்சள், மரவள்ளிகிழங்கு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக, விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் குறைந்த நேரமே வினியோகிக்கப்படுகிறது. மேலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதனால், ஏற்கனவே சாகுபடி செய்துள்ள நெல், கரும்பு, மரவள்ளிகிழங்கு,
மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையுள்ளது. குறைந்தழுத்த மின்சாரம் வழங்கப்படுவதால் மின்மோட்டார்கள் பழுதடைந்து விடுகிறது. மின்சாரம் எப்போது வரும், போகும் என்பது தெரியாததால், மின்மோட்டார் அருகே விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தற்போது, கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அறிவிக்கப்படாத இந்த மின்வெட்டால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் புழுக்கம் தாங்காமல் குழந்தைகளுடன் வீட்டிற்கு வெளியே வந்து தெருக்களில் தூங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முறையாக மின்சாரம் வழங்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.