டூ - வீலர் ஓட்டிய 5 சிறார்கள் பெற்றோர் மீது வழக்குப்பதிவு
நாகர்கோவில்:தக்கலை போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில் லைசென்ஸ் இல்லாமல் டூ - வீலர் ஓட்டிய ஐந்து சிறார்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இளம் சிறார்கள் டூ - வீலர் ஓட்டி சாகசங்களில் ஈடுபடுவதை தடுக்க, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தப்படுகிறது. மேலும், சிறார்களின் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதிகளவில் அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது.
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், ஏராளமான சிறார்கள் ரோடுகளில் சாகசங்கள் காட்டியபடி டூ - வீலர்களை ஓட்டிச் செல்கின்றனர்.
இதைத் தடுக்க போலீஸ் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு டூ - வீலர் ஓட்டிய ஐந்து சிறார்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர்கள் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் பெற்றோருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 25,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தாண்டில் இதுவரை தக்கலையில் மட்டும் எட்டு சிறார்கள் மீது இதுபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, டி.எஸ்.பி., பார்த்திபன் கூறினார்.