கொக்கைன், போதை பொருட்கள் பறிமுதல் 50 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டம்
கோவை:கோவையில் கொக்கைன் உள்ளிட்ட, உயரக போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய புள்ளிகள் 50 பேரிடம் விசாரிக்க, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இரு தினங்களுக்கு முன், கோவையில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.54 லட்சம் மதிப்பிலான மெத்தபெட்டமைன், கஞ்சா, கொக்கைன், குஷ் உள்ளிட்ட போதைப்பொருட்கள், பணம் ரூ. 25 லட்சம் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 கார்கள், 12 மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து, கோவை மற்றும் பிற பகுதிகளில் உள்ள மாணவர்கள், ஐ.டி., ஊழியர்கள், தொழிலதிபர்கள், டாக்டர்கள் என பல தரப்பினருக்கு, போதைப்பொருட்களை சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.
அவர்களின் மொபைலை ஆய்வு செய்த போது, கோவையை சேர்ந்த முக்கிய புள்ளிகள் 50க்கும் மேற்பட்டோரின் எண்கள் இருந்துள்ளன.
அதன் அடிப்படையில், இவர்களிடம் இருந்து போதைப்பொருட்களை வாங்கிய, 50க்கு மேற்பட்ட முக்கிய புள்ளிகளுக்கு, சம்மன் அனுப்பி விசாரணை நடத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.