உசிலம்பட்டி ஏட்டுவை கொலை செய்த கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர் மூன்று பேர் கைது

கம்பம், தேனி:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஏட்டு முத்துக்குமாரை கொலை செய்த கும்பல் கேரளாவிற்கு தப்பி ஓட முயன்றபோது தேனி மாவட்டம் கம்பம் அருகே போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய பொன்வண்ணன் 29, மார்பு மற்றும் தோள்பட்டையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அவர் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்தவர் முத்துக்குமார். இவர் மார்ச் 27ல் முத்தையன்பட்டி மதுக்கடையில் நண்பர் ராஜாராமுடன் மதுக்குடித்துக் கொண்டிருந்தார். அப்போது பழனிசெட்டிபட்டி பொன்வண்ணனுடன் தகராறு ஏற்பட்டது.

பின் தோட்டத்தில் ஏட்டு முத்துக்குமார், ராஜாராம் மது அருந்தியுள்ளனர். அப்போது தகராறில் ஈடுபட்ட பொன்வண்ணன் கும்பல் அங்கு சென்று முத்துக்குமாரை கொலை செய்தனர்.

இக்கொலையில் தேனி மாவட்டம் பொம்மையகவுண்டன்பட்டி ஜெயக்கொடி மகன் பிரபாகரன் 35, அவரது தம்பி பாஸ்கரன் 32, பழனிச்செட்டிபட்டி அருகேவுள்ள மாரியம்மன் கோயில்பட்டி பானுகோவன் மகன் பொன்வண்ணன் 29, அல்லிநகரம் சிவசாமி மகன் சிவனேஸ்வரன் 32, ஆகிய நால்வரும் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இவர்களை பிடிக்க தென் மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் திண்டுக்கல் டி.ஐ.ஜி., வந்திதா பாண்டே, எஸ்.பி.க்கள் அரவிந்த் (மதுரை), சிவபிரசாத் (தேனி), ஆஷிஸ் ராவத் (சிவகங்கை), சந்தீஷ் (ராமநாதபுரம்) ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அமைக்கப்பட்டன. கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் அலைபேசி அழைப்புக்களை வைத்து போலீசார் பின் தொடர்ந்தனர். கொலை செய்த பின் நான்கு பேரும் இரண்டு டூவீலர்களில் தாழையூத்து செக்போஸ்ட் வழியாக கடமலைக்குண்டு, வருஷநாடு வந்தனர். அங்கிருந்து கேரளா தப்பி செல்ல முடிவு செய்தனர். இவர்கள் திட்டம் போலீசாருக்கு தெரிந்தது.

கேரள எல்லை, வனச்சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். நேற்று மதியம் 1:00 மணிக்கு கம்பமெட்டு மலையடிவாரத்தில் மாந்தோப்பில் பதுங்கி
அங்கிருந்து கேரளாவிற்கு நடந்து சென்றனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்று சரணடைய எச்சரித்தனர். அப்போது பொன்வண்ணன் அரிவாளால் வெட்டியதில் உசிலம்பட்டி குற்றப்பிரிவு போலீஸ்காரர் சுந்தரபாண்டியன் இடது கை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது.

இதனை கண்ட உசிலம்பட்டி டவுன் இன்ஸ்பெக்டர் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டதில் பொன்வண்ணன் மார்பு, தோள்பட்டை பகுதியில் 3 குண்டுகள் பாய்ந்து கீழே விழுந்தார். இதனை கண்ட பிரபாகன், பாஸ்கரன், சிவனேஸ்வரன் போலீசாரிடம் சரணடைந்தனர்.

காயம்பட்ட பொன்வண்ணனுக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு பிறகு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மாலை 6:00 மணிக்கு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் போலீஸ்காரர் சுந்தரபாண்டியனை டி.ஐ.ஜி., வந்திதா பாண்டே சந்தித்து ஆறுதல் கூறினார்.

கொலையில் சிக்கியவர்கள் மீதுதேனியில் பல வழக்குகள் நிலுவை




உசிலம்பட்டி ஏட்டு கொலை வழக்கில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 குண்டுகள் பாய்ந்த பொன்வண்ணன் மீது 2022 ல் சிறுமியை திருமணம் செய்ததற்காக போக்சோ வழக்கு போடப்பட்டது. இந்த திருமணத்தை தட்டி கேட்ட உறவினரை கொலை செய்த வழக்குகள் பழனிசெட்டிபட்டி போலீசில் உள்ளது. முக்கிய குற்றவாளி பட்டியலில் உள்ளார்.


பொம்மையகவுண்டன்பட்டி பிரபாகரன், பாஸ்கரன் இருவரும் சகோதரர்கள். இவர்கள் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பதில் ஒரு ஆண்டுக்கு முன் உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறில் இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு அல்லிநகரம் போலீசில் உள்ளது.அல்லிநகரம் சிவனேஸ்ரன் மீது போடி வழக்கறிஞர் கடத்தல் வழக்கு, தேனியில் இருவரிடம் குறைந்த விலையில் தங்க நாணயங்கள் வாங்கி தருவதாக பண மோசடி வழக்கு, நண்பரின் தந்தையை கொலை செய்த வழக்குகள் உள்ளன. மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையான இவர்கள் நண்பர்களாக இருந்துள்ளனர்.

Advertisement