தடுப்புச்சுவர் இல்லாத கடல்மங்கலம் பாலம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கடல்மங்கலத்தில் இருந்து, தோட்டநாவல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே செல்லும் நீர்வரத்து கால்வாய் மீது, பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இதன் வழியே தினமும், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பாலத்தின் இருபுறமும், வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தில் சிக்காதபடிக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

தற்போது, பாலம் முறையான பராமரிப்பு இல்லாததால், இருபுறமும் உள்ள தடுப்புகள் வாகனங்கள் மோதி சேதமடைந்து விழுந்து உள்ளன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் போதிய தடுப்புகள் இல்லாததால், எந்நேரத்திலும் நிலைத் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

பாலத்தில் வாகனங்களால் மோதி விழுந்துள்ள தடுப்புகள், மீண்டும் அமைக்கப்படாமல் உள்ளன. எனவே, பாலத்தில் போதிய தடுப்புகளை அமைக்க, துறை அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement