பழுதடைந்த பேருந்தால் மானாம்பதியில் பயணியர் அவதி

உத்திரமேரூர்:சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து, உத்திரமேரூர், மானாம்பதி வழியாக வந்தவாசிக்கு, தடம் எண்:148, பேருந்து தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பேருந்து நேற்று வழக்கம்போல, சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து, வந்தவாசிக்கு சென்று கொண்டு இருந்தது. அப்போது, மாலை 5:00 மணியளவில் மானாம்பதியில் செல்லும்போது பேருந்து திடீரென பழுதடைந்து நின்றது.

பழுதடைந்த பேருந்தை சரி செய்ய ஓட்டுநர் முயற்சி செய்தும் பழுதை சரி செய்ய முடியவில்லை. பின், பேருந்தில் இருந்த பயணியர் இறக்கி விடப்பட்டனர். பயணியர் வேறொரு பேருந்துக்காக அரை மணி நேரம் காத்து இருந்தனர்.

அதை தொடர்ந்து, அவ்வழியே வந்த வேறொரு பேருந்தில் பயணியர் அனுப்பட்டனர்.

இது குறித்து பயணியர் கூறியதாவது:

சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து, உத்திரமேரூர் வழியாக வந்தவாசிக்கு இயக்கப்படும் பேருந்துகள் பெரும்பாலும் பழையதாகவே உள்ளன. இதனால், பேருந்துகளில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, குறித்த நேரத்திற்கு வீடு மற்றும் வேலைகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே, சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து, உத்திரமேரூர் வழியாக வந்தவாசிக்கு புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement