தேயிலை மகத்துவம் அறிந்து கொள்ள வர்த்தக கண்காட்சி

குன்னுார் : தென் மாநில தேயிலை துாளின் மகத்துவத்தை, சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ள, இரண்டு நாட்கள் வர்த்தக கண்காட்சி நேற்று துவங்கியது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவில், இந்திய தேயிலை வாரியம் சார்பில், 2 நாள் தேயிலை வர்த்தக கண்காட்சி நேற்று துவங்கியது. வாரிய துணை தலைவர் ராஜேஷ் சந்தர் துவக்கி வைத்தார்.

தலைமை வகித்த வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் பேசுகையில், ''மத்திய அரசு 2024- 20-26 வரையிலான இரு நிதி ஆண்டுகளுக்கு, தேயிலைக்கு பட்ஜெட்டில்,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில், தென் மாநில மேம்பாட்டிற்கு 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென் மாநில தேயிலை துாளின் மகத்துவம் குறித்தும், தேயிலை துாளில் கலப்படத்தை சுற்றுலா பயணிகள் மற்றும் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும் கண்காட்சி நடத்தப்படுகிறது. தேயிலை கலப்பட ஆய்வு நடத்தப்பட்டு 1030 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை வந்த பிறகு, உணவு பாதுகாப்பு துறை உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

மாவட்ட கூடுதல் கலெக்டர் சங்கீதா, வாரிய உறுப்பினர் தனஞ்செயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கண்காட்சியில் இன்கோசர்வ், டான்டீ, நீலகிரி தேயிலை விவசாயிகள் உற்பத்தி செய்யும் ஐ.பி.எஸ்., தொழிற்சாலை, தனியார் தொழிற்சாலைகள், மாவட்ட சுய உதவி குழுக்களின் ஆர்கானிக் தேயிலை தூள் உட்பட பல்வேறு வகையான தேயிலைத் தூள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

Advertisement