உயர்கல்விக்கு கவனமாக விண்ணப்பிக்க வேண்டும்

புதுச்சேரி: சென்டாக்கிற்கு விண்ணப்பிக்கும்போது கவனமாக விண்ணப்பிக்க வேண்டும் என, வில்லியனுார் கஸ்துார்ப மகளிர் கல்லுாரி உதவி பேராசிரியரும் சென்டாக் குறை தீர்வு அதிகாரியுமான விவேகானந்ததாசன் பேசினார்.

'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

புதுச்சேரியில் மையப்படுத்தப்பட்ட சேர்க்கை அமைப்பாக சென்டாக் உள்ளது. இந்த சென்டாக் அமைப்பு வழியாக தான் புதுச்சேரியில் அனைத்து சேர்க்கையும் நடக்கிறது. முன்பெல்லாம் உயர் கல்வி சேர குறிப்பிட்ட கல்லுாரிக்கு நேரடியாக சென்று விண்ணப்பம் வாங்கி விண்ணப்பிக்க வேண்டும்.

புதுச்சேரியில் இன்று மாணவர் சேர்க்கை அப்படி அல்ல. மருத்துவம், இன்ஜினியரிங், கலை அறிவியல் என அனைத்து படிப்புகளுக்கும் சென்டாக்கில் ஒரு விண்ணப்பம் போட்டால் போதும். ஆனால், அந்த சென்டாக் விண்ணப்பத்தை முறையாக சமர்ப்பிக்காமல் கோட்டை விட்டு விடுகின்றனர். சென்டாக் இணையதளத்திலேயே ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறையை பற்றி தெளிவாக தகவல் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதை பற்றி தெரியாமல் நேரடியாக நெட் சென்டருக்கு சென்று விண்ணப்பிக்கின்றனர். அங்கு அவர்கள் சொல்வதை கேட்டு விண்ணப்பித்தினை பூர்த்தி செய்கின்றனர்.

கடைசியாக பார்த்தால் மாணவர்கள் கேட்ட பாடப்பிரிவு கிடைக்காது. காரணத்தை ஆராயந்தால் 'நெட்' சென்டரில் தவறாக விண்ணப்பித்தினை பூர்த்தி செய்துள்ளதை கண்டு கடைசி நேரத்தில் அதிர்கின்றனர்.

பிளஸ் 2 வரை 12 ஆண்டுகள் படித்த நம்முடைய படிப்பு எங்கே போய்விட்டது. முன் திட்டமிடல் இல்லை. நாம் நன்றாக படித்து இருந்தால் கூட சரியாக விண்ணப்பிக்க தெரியாவிட்டால் எதிர்காலம் பறிபோய்விடும் என்பதை கவனத்தில் கொண்டு சென்டாக்கிற்கு கவனமாக விண்ணப்பிக்க வேண்டும்.

சென்டாக்கில் விண்ணப்பிக்க மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், புதுச்சேரி மாணவர்கள் என்றால் அதற்கான குடியுரிமை சான்றிதழ் அவசியம். சிலர் ஆதார் கார்டு, ரேஷன் வைத்து கொண்டு புதுச்சேரி மாணவர்கள் என்று விண்ணப்பிக்கின்றனர்.

அது ஏற்றுக்கொள்ள முடியாது. அண்மையில் வருவாய் துறையில் வாங்கிய குடியிருப்பு சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். இதேபோல் விளையாட்டு, முன்னாள் ராணுவ வீரர் என சிறப்பு இட ஒதுக்கீட்டு பிரிவினரும் அண்மையில் வாங்கிய சான்றிதழை கொண்டு தான் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த சான்றிதழ்களை சமர்ப்பிக்காததால் நினைத்த கோர்ஸ் கிடைக்காமல் போய்விடுகிறது. இல்லையெனில் விருப்பம் இல்லாத கோர்ஸ் தான் கிடைக்கும். நம் கண் முன்னே உயர்கல்வியில் பல வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. இருப்பினும் அதில் நாம் எதை தேர்வு செய்ய போகிறோம் என்கிற முன்முடிவு அவசியம்.

அதேபோல், விண்ணப்பிக்கும்போது நாம் விரும்பும் கோர்ஸ்களை முறையாக வரிசைப்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். சின்ன சின்ன தவறுகளை செய்துவிட்டு, படிக்க முடியாமல் போய்விட்டவர்களும் உண்டு. உயர்கல்வியில் பல வாய்ப்புகள் நம் முன்னே உள்ளன. எதை தேர்ந்தெடுத்தாலும் நன்றாக படித்தால் எதிர்காலமும் சிறப்பாகவே அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement