பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை: அண்ணாமலை

கோவை: கோவை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:
'சி வோட்டர்' கருத்துக் கணிப்பில், தமிழக முதல்வருக்கு 27 சதவீதம் தான் ஆதரவு கிடைத்துள்ளது. எந்த ஒரு மாநிலத்தின், எவ்வளவு மோசமான முதல்வராக இருந்தாலும், 40 சதவீதமாவது ஆதரவு இருக்கும்.
நல்ல முதல்வராக இருந்தால் 65 சதவீதம் இருக்கும். நான்கு பேரில் மூன்று பேர் வேண்டாம் என்று சொல்கின்றனர். எங்கள் கள ஆய்வும் இதையே சொல்லுகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு மண்டலங்களிலும், ஒவ்வொரு விதமாக மக்கள் ஓட்டளிக்கின்றனர். ஐந்தில் மூன்று மண்டலங்களில் ஜெயிக்காமல், யாரும் ஆட்சிக்கு வர முடியாது.
மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரான பழனிசாமி, நாட்டின் உள்துறை அமைச்சரை சந்திப்பது தவறு இல்லை.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், விஜய்க்கும் மாநில அரசு பாதுகாப்பு கொடுக்காததால், மத்திய அரசு கொடுக்கிறது; அரசியல் காரணம் ஏதுமில்லை. நடிகர் விஜய் தன் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறார்; அதை வரவேற்கிறேன்.
தமிழக மக்களின் நலனும், கட்சியின் நலனும் தான் எனக்கு முக்கியம். நான் அரசியலுக்கு வந்திருப்பது, பதவிக்காக கிடையாது. ஒரு நேர்மையான அரசியல்வாதியாக வாழ விரும்புகிறேன்.
சென்னையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு ஏற்கனவே இரண்டு ரயில்கள் சென்று கொண்டுள்ளன.
மூன்றாவதாக ஒரு ரயில், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை போன்ற அதிக ரயில் செல்லாத இடங்களையும் இணைக்கிறது.
கோவை - ராமநாதபுரம் - ராமேஸ்வரத்தை இணைக்க ரயில் தேவை என, அமைச்சரிடம் கேட்டுள்ளோம். கரூரிலிருந்து 99 கி.மீ.,க்கு ஆறு வழிச்சாலை அமைக்கும் திட்டம், கிடப்பில் போடப்படவில்லை.
நிலம் கையகப்படுத்தும் பரிசீலனை கமிட்டி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


