கடும் வெப்பம் எதிரொலி வெறிச்சோடியது தேக்கடி

கூடலுார்: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து விடுமுறையாக இருந்த போதும் கடுமையான வெப்பத்தால் கேரள மாநிலம் தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தேக்கடியும் ஒன்று. அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே தேங்கியிருக்கும் ஏரியில் படகு சவாரி செய்து கொண்டே வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகளை கண்டு சுற்றுலா பயணிகள் ரசிப்பர்.
இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர்.
தேக்கடியில் வனப்பகுதிக்குள் நடந்து செல்லும் வகையிலான டிரக்கிங், யானை சவாரி உள்ளிட்டவைகள் இருந்தும், படகு சவாரி செய்வதில் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆண்டுதோறும் விடுமுறையில் பள்ளி மாணவர்கள் அதிகம் தேக்கடி வருவார்கள்.
இந்தாண்டு கடுமையான வெப்பம், பெரியாறு அணை நீர்மட்டம் குறைவு காரணமாக சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. காலை 7:00 மணி டிரிப்புக்கு மட்டுமே சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய வருகின்றனர்.
காலை 9:00 மணி, 11:00 மணி, மதியம் 1:00 மணி, 3:00 மணி டிரிப்புகளில் சுற்றுலாப் பயணிகள் இன்றி தேக்கடி படகு நிறுத்தப் பகுதி வெறிச்சோடியுள்ளது.
அணையின் நீர்மட்டம் குறைவால் படகு நிறுத்தப்பகுதியில் நீர் தேங்கும் பரப்பளவு குறைந்துள்ளதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதனால் படகு சவாரியை தவிர்த்து வரும் சுற்றுலாப்பயணிகள் குமுளியில் துவங்கியுள்ள மலர் கண்காட்சியை கண்டு ரசிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.