சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்; தவறினால் அபராதம்

சென்னை:சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரியை இன்று செலுத்த தவறினால், 1 சதவீதம் அபராதத்துடன் வசூலிக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துஉள்ளது.

சென்னை மாநகராட்சியில், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ளனர்.

மாநகராட்சியின் வரி வருவாயில், சொத்து வரியே பிரதானமாக உள்ளது. ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2024 - 2025ம் நிதியாண்டுக்கான சொத்து வரி வசூல், இன்றுடன் முடிவடைகிறது. இன்றைக்குள் சொத்து வரியை செலுத்த தவறினால், அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி வருவாய் அலுவலர் பானு சந்திரன் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் இந்த நிதியாண்டில், 1,900 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

பலர், 'ஆன்லைன்' முறையில் சொத்து வரி செலுத்தி வருகின்றனர்.

இதனால், எவ்வளவு பேர் சொத்து வரி செலுத்த வேண்டும் என்ற விபரம், ஏப்., 1ம் தேதிக்கு பின் தெரிய வரும்.

அவ்வாறு சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு, 1 சதவீதம் அபராதத்துடன் சொத்து வரி வசூலிக்கப்படும்.

எனவே உரிமையாளர்கள், சொத்து வரியை முறையாக செலுத்த வேண்டும். இதற்காக, வருவாய் துறை அலுவலகங்கள் இன்று செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement