குறைதீர் கூட்டத்தில் அமைச்சரிடம் மனு கொடுத்தாலும் கவுன்சிலர் சிபாரிசு வேணுமாம்; கோரிக்கை மனுக்கள் நிலை குறித்து ஆய்வு செய்யணும்

மதுரையில் மேற்கு சட்ட சபை தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் மூர்த்தி அறிவிக்கப்பட்ட பின் முதல்முறையாக தொகுதி மக்களுக்கான குறைதீர் கூட்டத்தை பிப்.28ல் பரவையில் நடத்தினார். மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். அமைச்சரிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன. அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.


இதேபோல் அமைச்சர் தியாகராஜன் மத்திய தொகுதி மக்களுக்கான குறைதீர் கூட்டத்தை மதுரைக் கல்லுாரி மைதானத்தில் நடத்தினார்.


இதில் 600க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன.

இம்மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர். இந்நிலையில் அமைச்சர்களிடம் நேரில் மனுக்களைக் கொடுத்தாலும், சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர்கள், வார்டு கட்சி நிர்வாகிகள் சிபாரிசு செய்தால் தான் அதிகாரிகள் மனுக்களை பரிசீலிக்கின்றனர் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

தொகுதி மக்கள் கூறிய தாவது: வாரந்தோறும் திங்களன்று கலெக்டர் தலைமையிலும், மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன. ஆனாலும் பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதில்லை.

இப்போது அமைச்சர்களும் மனுக்களை பெறுகின்றனர். இந்த மனுக்களை துறைவாரியாக அதிகாரிகள் பரிசீலனை செய்தாலும், வார்டு கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்களிடம் கேட்டு, அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.


விராட்டிபத்து ரோட்டில் இருளாண்டி காலனி பகுதியினருக்கு 4 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் உள்ளது. இங்கு தண்ணீர் வினியோகிக்கும் போது உடைப்பு ஏற்பட்டு வீணாக ரோடுகளில் தேங்குகிறது.


இதுகுறித்து அமைச்சரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. அதுபோல் ரோடுகள் வசதி, பாதாளச் சாக்கடை பிரச்னை குறித்தும் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. குறைதீர் முகாம்களில் பெற்ற மனுக்கள் நிலவரம் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement