பல்கலை நுாலகத்தை பயன்படுத்தி அரசு பணி பெற்ற 85 இளைஞர்கள்

மதுரை : 'மதுரைக் காமராஜ் பல்கலை நுாலகத்தைப் பயன்படுத்தி, 85க்கும் மேற்பட்டோர் அரசு பணிகளில் நியமனம் பெற்றுள்ளனர்' என்று தலைமை நுாலகர் சுரேஷ் தெரிவித்தார்.

மதுரை காமராஜ் பல்கலை நுாலகம் சர்வதேச தரத்தில், மாநில அளவில் முதன் முறையாக ஆர்.எப்.ஐ.டி., தொழில்நுட்பத்தை செயல்படுத்தியுள்ளது. மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், 15 ஆயிரம் மின்னணு இதழ்கள் உள்ளன. பல்கலை மாணவர்கள் மட்டுமின்றி பக்கத்து கிராம மாணவர்களுக்கும் அனுமதி உண்டு.

தலைமை நுாலகர் சுரேஷ் கூறியதாவது: 2022 முதல் பதிவாளர் ராமகிருஷ்ணன், வளாக அதிகாரி ஆனந்த் குமார் ஏற்பாட்டில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் கிராம இளைஞர்களும் பயன்படுத்த அனுமதித்தினர். விண்ணப்ப கடிதம், ஆதார் நகல் வழங்கி அனுமதி பெறலாம். கட்டணம் கிடையாது. தினமும் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை, சனி, ஞாயிறுகளில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை அனுமதிக்கப்படுவர்.

புத்தகங்கள், கணினிகளை பயன்படுத்துவதுடன், ஆன்லைன் இதழ்களையும் பதிவிறக்கம் செய்யலாம். புத்தக இரவல் கிடையாது. மூன்றாண்டுகளாக 500க்கும் மேற்பட்ட கிராம இளைஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். இவர்களில் 85க்கும் மேற்பட்டோர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 4 தேர்வுகளில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

தற்போது சோழவந்தான், நாகமலை, கருமாத்துார், தனக்கன்குளம், தென்பழஞ்சி, உசிலம்பட்டி பகுதியில் இருந்து 250க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இங்கு வருகின்றனர். நுாலகம் சார்பில் வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்கி படிக்க வைக்கின்றனர்.

பயனாளர்கள் கூறுகையில், ''இங்கு அலைபேசி, லேப்டாப் சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. வீட்டிலிருந்து படிப்பதை விட இங்கு மற்றவர்களை பார்த்து படிக்க முடிகிறது. ஒருவருக்கொருவர் விவாதித்து படிப்பதால் கடின வினாக்களை எதிர் கொள்ள முடிகிறது'' என்றனர்.

Advertisement